திருக்குறள் சார்ந்த ஏஐ மாதிரியை உருவாக்கும் ஐஐடி மெட்ராஸ்

திருக்குறள் சார்ந்த ஏஐ மாதிரியை உருவாக்கும் ஐஐடி மெட்ராஸ்

படம்: த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

28 Nov 2026 - 4:05 pm

2 mins read

சென்னை: திருக்குறளை மையமாகக் கொண்ட புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மொழி மாதிரியை சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) உருவாக்கி வருகிறது.

திருக்குறளின் போதனைகளை மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளவும், அவற்றை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தவும் இந்த மாதிரி உதவும் என அதன் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி தெரிவித்தார்.

ஒரு பில்லியனுக்கும் குறைவான அளவுருக்களைக் கொண்ட இந்த மாதிரி, ‘டிரான்ஸ்ஃபார்மர்’ கட்டமைப்பைப் பயன்படுத்தும். இது ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் தொழில்நுட்ப அறக்கட்டளையில் உருவாக்கப்படும் என அவர் கூறினார்.

“கல்விக்கான ஏஐ தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கவும் இந்திய மொழிகளுக்கு ஆதரவளிக்கவும் எங்கள் கல்வி நிறுவனம் மேற்கொள்ளும் விரிவான முயற்சிகளின் ஒரு பகுதி இது. நாடு முழுவதும் தமிழ் நூலான திருக்குறளைப் பிரபலப்படுத்தும் ‘காசி தமிழ்ச் சங்கமம் 5.0’ நிகழ்வின் நோக்கத்திற்கு இது வலுசேர்க்கும்,” என்றார் பேராசிரியர் காமகோடி.

“ஏற்கெனவே உள்ள பெரிய மொழி மாதிரியை மாற்றியமைப்பதற்குப் பதிலாக, சிறிய, புதிய மாதிரியாக இது உருவாக்கப்படும். இதனை ‘பிக்கோ மொழி மாதிரி’ எனக் கூறலாம்,”என அவர் விவரித்தார்.

திருக்குறளை மட்டுமே சார்ந்திராமல், இந்த மாதிரிக்குத் தேவையான மொழி, உரை அடித்தளத்தை உருவாக்க விரிவான தரவுகள் பயன்படுத்தப்படும்.

அதன்படி, தமிழ் மொழித் தரவுத் தொகுப்பு, திருக்குறள், பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட அதன் உரைகள், விளக்கங்கள் ஆகியவற்றைக் கொண்டு இதற்குப் பயிற்சி அளிக்கப்படும்.

திருவள்ளுவரின் நன்னெறிகளையும் வாழ்க்கைக் கோட்பாடுகளையும் அறிந்துகொள்ளவும், சமகாலச் சூழல்களில் அவற்றின் பொருத்தப்பாட்டைப் புரிந்துகொள்ளவும் இந்த மாதிரி பயனர்களுக்கு உதவும் எனத் திரு காமகோடி கூறினார்.

திருக்குறள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், ‘சர்வம் ஏஐ’, ‘பாரத்ஜென்’ போன்ற ஏஐ தளங்கள் அதன் போதனைகளை மேலும் அதிகமானோரிடம் கொண்டுசேர்க்க உதவும் என்றார்.

குறிப்புச் சொற்கள்