சென்னை: இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி சென்னை மையத்தில் மருத்துவப் படிப்புகளை வழங்க உள்ளதாக அதன் இயக்குநர் வே. காமகோடி தெரிவித்துள்ளார்.
இதற்காக சென்னையில் உள்ள ஐஐடி வளாகத்தில் சொந்தமாக மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையைத் தொடங்கி, எம்பிபிஎஸ், எம்டி உள்ளிட்ட பட்டப்படிப்புகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஏற்கெனவே ஐஐடி கரக்பூர் மையம் சொந்தமாக மருத்துவமனையைத் தொடங்கி எம்டி படிப்புகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், அதே வழியைப் பின்பற்றி, சென்னை ஐஐடியிலும் மருத்துவமனை கட்டப்பட்டு, தேசிய மருத்துவ ஆணையத்தின் முறையான அனுமதியைப் பெற்று மருத்துவப் படிப்புகள் தொடங்கப்படும் என்றார்.
இந்தியாவில் புதிய மருத்துவக் கருவிகளைச் சொந்தமாக வடிவமைப்பு செய்து உற்பத்தி செய்ய வேண்டுமெனில், மருத்துவர்களும் பொறியாளர்களும் ஒரே கூரையின்கீழ் இணைந்து செயல்பட வேண்டும் என்று திரு காமகோடி வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவமும் தொழில்நுட்பமும் கைகோக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அறிந்துச் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், பொறியாளர்களுக்கு மருத்துவப் பயிற்சி அளிப்பதைவிட, மருத்துவ வல்லுநர்களுக்குப் பொறியியல் தொழில்நுட்பங்களில் பயிற்சி அளிப்பதே மிக எளிதான, பயனுள்ள அணுகுமுறையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
“தொழில்நுட்ப நிறுவனங்கள் மருத்துவத் துறையில் தடம்பதித்தால் மட்டுமே அனைத்துலக மருத்துவச் சந்தையில் இந்தியா தொடர்ந்து வலுவான இடத்தை வகிக்க முடியும். இதற்குத் தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதல் மிகவும் அவசியம்,” என்று திரு காமகோடி மேலும் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியின் இந்தப் புதிய முயற்சியானது, எதிர்காலத்தில் உயர்கல்வி, மருத்துவ ஆராய்ச்சித் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


