தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிம்பொனி இசைத்து சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு தமிழக அரசு சிறப்பான வரவேற்பு: நான் இசைக்கடவுள் அல்ல என்றார்

2 mins read
b5975c94-9d16-4e67-9bf6-8f33b02d7a0d
சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்பு அளித்தார். - படம்: ஊடகம்

சென்னை: லண்டனில் சிம்பொனி இசைத்து சென்னை திரும்பிய இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் நாள்களில் 13 நாடுகளில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடக்கும் என்றார்.

லண்டனில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில் சிம்பொனி இசை விருந்து படைத்த இளையராஜா மார்ச் 10ஆம் தேதி சென்னை வந்தடைந்தார். அவருக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்பு அளித்தார்.

அப்போது பேசிய இளையராஜா, மிகவும் மகிழ்வான இதயத்தோடும் மலர்ந்த முகத்தோடும் தம்மை அனைவரும் வழி அனுப்பி வைத்ததும் லண்டன் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த இறைவன் அருள் புரிந்ததும்தான் காரணம் என்றார்.

“இது சாதாரண விஷயம் அல்ல. இசைக்குறிப்புகளை. எழுதிக்கொடுத்தால் வாசிக்கலாம். ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி வாசித்தால் இசை எப்படி இருக்கும். இப்படி நாம் எல்லாரும் பேசுவதுபோல் ஒருவருக்கும் புரியாத மாதிரி இருக்கும்.

சிம்பொனி அரங்கேற்றம் எந்த விதிமீறலும் இல்லாமல் சிறப்பாக நடந்தது. சிம்பொனி நான்கு பகுதிகளைக் கொண்டது. நான்கு பகுதிகளும் இசைத்து முடிக்கப்படும் வரை யாரும் கைதட்ட மாட்டார்கள். கைதட்டக்கூடாது என்பதுதான் விதிமுறை. ஆனால் நமது ரசிகர்களும் அங்கு வந்திருந்த பொதுமக்களும் ஒவ்வொரு பகுதி முடியவும் கைதட்டினார்கள்,” என்றார் இளையராஜா.

சிம்பொனி இசையை ரசித்தவர்கள் கைதட்டல் மூலம் பாராட்டுகளைத் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட அவர், அனைத்து வல்லுநர்களாலும் பாராட்டப்பட்டது என்றார்.

தமிழக அரசு தமக்கு மரியாதை செய்தது நெகிழ வைப்பதாகவும் தமிழக மக்கள் அனைவரும் வாழ்த்துவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இளையராஜா கூறினார்.

“லண்டன் நிகழ்ச்சி வெறும் தொடக்கம்தான் என்றும் மேலும் 13 நாடுகளில் சிம்பொனி அரங்கேற்றப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

“இந்தியாவிலும் அரங்கேற்றப்படும். அப்போது அமைதியாக இசையை ரசிக்கலாம். சிம்பொனியை யாரும் பதிவிறக்கம் செய்து கேட்க வேண்டாம். ஏனென்றால் பயன்படுத்திய 80 வாத்தியக் கருவிகளின் இசையை உணர முடியாது. 82 வயதில் என்னால் என்ன செய்ய முடியும் என்று நினைக்காதீர்கள்; அளவீடுகளுக்குள் நான் இல்லை. நான் இசைக்கடவுளும் இல்லை,” என்று இளையராஜா மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்