ஊட்டி: தமிழகத்தில் கொட்டித் தீர்த்துவரும் தொடர்மழை காரணமாக நீலகிரியில் ஐந்து சுற்றுலா நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
மலை ரயில் சேவையும் நான்காவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் ஆரஞ்சு, ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதோடு மழை பாதிப்பு ஏற்பட்டால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுற்றுலாத் தளமான நீலகிரியிலும் இடைவிடாது மழை பெய்து வருகிறது. ரயில் பாதைகளில் பாறைகள் சரிந்து விழுந்துள்ளதால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொட்டபெட்டா மலைச்சிகரம், பைன் மரக்காடுகள், எட்டாவது மைல், வெர்ன்ஹில், அவலாஞ்சி ஆகிய ஐந்து சுற்றுலா நிலையங்கள் புதன்கிழமை (அக்டோபர் 22) ஒருநாள் மட்டும் மூடப்படுவதாகத் தமிழக வனத்துறை அறிவித்துள்ளது.
மழை தொடர்ந்து நீடிப்பதால் சுற்றுலாப் பயணிகள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

