சென்னை: வடகிழக்குப் பருவ மழையின் தாக்கம் காரணமாக, சென்னையில் ஏராளமானோர் வயிற்றுப்போக்கு, உணவு ஒவ்வாமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்காக அரசு மருத்துவமனைக்கு வருபவர்களில் ஏறக்குறைய 40 விழுக்காட்டினருக்கு இப்பாதிப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அசுத்தமான இறைச்சி, காய்கறி, பழங்கள், குடிநீர், பால் ஆகியவற்றின் மூலம் மனித உடலுக்குள் செல்லும் ஒருவகை கிருமியால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்றும் முறையாக சிகிச்சை பெற்றால் விரைவில் குணமடையலாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதையடுத்து, இத்தகைய பாதிப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மருத்துவக் குழுக்கள் மூலம் நோய் எதிர்ப்பு மருந்துகள் விநியோகிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

