சென்னை: குற்றச்சம்பவங்களைக் கையாள்வதிலும் தடுப்பதிலும் தனது தலைமையில் தமிழக காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியதும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நிகழும் கொலைச் சம்பவங்கள் குறித்துப் பேச அனுமதிக்க வேண்டும் என பேரவைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தார்.
அன்றாட நிகழ்வுகள்போல் தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் நடந்து வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
மேலும், சில கொலைச் சம்பவங்கள் தொடர்பான விவரங்களையும் அவர் பட்டியலிட்டார். எனினும், அவர் தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், குற்றச்சம்பவங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
“அதிமுக ஆட்சிக் காலத்துடன் ஒப்பிடுகையில், திமுக ஆட்சியில் பழிக்குப்பழி நடைபெறும் கொலைச் சம்பவங்கள் குறைந்துள்ளன. ஆனாலும், திமுக ஆட்சியில் கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதுபோல் தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன.
“காவல்துறை சுதந்திரமாகச் செயல்படுகிறது. குற்றப் பின்னணி உடையோரை காவல்துறை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது,” என்றார் ஸ்டாலின்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், அன்றாடம் நிகழும் கொலைச் சம்பவங்கள்தான் திமுக அரசின் சாதனைப் பட்டியல் என்றார்.
நெல்லையைச் சேர்ந்த 60 வயதான ஜாகிர் உசேன், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்தார். கடந்த 18ஆம் தேதி இவர் படுகொலை செய்யப்பட்டார்.
இதில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியைக் காவல்துறை கைது செய்துள்ளது. எனினும், தாம் கொலை செய்யப்படுவது உறுதி என ஜாகிர் உசேன் வெளியிட்ட காணொளியில் அவரே பேசியுள்ளார்.
காணொளி வெளியிட்ட பிறகும் அவருக்கு ஏன் பாதுகாப்பு தரப்படவில்லை என பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
“தனக்குள்ள ஆபத்து குறித்து ஜாகிர் உசேன் புகார் கொடுத்தும் பலனில்லை. அவரிடம் காவல்துறை கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளது. அதன் விளைவாக அவர் உயிரிழந்துவிட்டார்,” என்றார் பழனிசாமி.