சென்னை: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுப் போனதற்கு இங்கு நடக்கும் திறமையற்ற ஆட்சிதான் காரணம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுக ஆட்சியாளர்களைச் சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி சாராய உயிரிழப்பு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, நச்சு சாராயம் தயாரிப்பவர், விற்பனையாளர் மற்றும் காவல்துறையினருக்கு இடையே தொடர்பு உள்ளது என்றும் சி.பி.சி.ஐ.டி நியாயமான, பாரபட்சமற்ற முறையில் விசாரணையை மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளது. எனவே இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.
இந்தத் தீர்ப்பு குறித்து பேட்டி அளித்துள்ள சட்டத் துறை அமைச்சர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்போது முறையான வாதங்களை எடுத்துரைத்து தடுத்து நிறுத்துவோம் என்றும் மேல் முறையீட்டுக்கு எப்போது செல்வது என்பதை முதல் அமைச்சர் முடிவு செய்வார் என்றும் கூறி இருப்பது தி.மு.க.வின் நடவடிக்கை மீது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் திமுகவுக்கு அக்கறை இருந்தால் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஆனால், சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து முதல் அமைச்சர் முடிவெடுப்பார் என்று சொல்வது குற்றவாளிகளுக்கு உதவி புரிவதுபோல் உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.