தமிழகத்தில் கூடுதலாக 56 வாக்குச்சாவடிகள்

தமிழகத்தில் கூடுதலாக 56 வாக்குச்சாவடிகள்

வாக்குச்சாவடிகள் 75,032ல் இருந்து 75,088ஆக உயர்ந்துள்ளதாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு
கோப்புப் படம்: ஒன் இந்தியா தமிழ்

04 Nov 2026 - 2:48 pm

1 mins read

சென்னை: தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்து, அங்கீகரிக்கப்பட்ட புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் மூலம் மாநிலத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 75,032ல் இருந்து 75,088ஆக உயர்ந்துள்ளதாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பில், 134 புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 78 வாக்குச்சாவடிகள் இணைக்கப்பட்டும் 357 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டும் உள்ளன. மொத்தம் 491 வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டு, 56 வாக்குச்சாவடிகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் புதுப்பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர்களின் வசதிக்காக ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சமாக 1,200 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கும் வகையில் எண்ணிக்கை சீரமைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் எளிதில் சென்று வர இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

காவல் நிலையங்கள், மருத்துவமனைகள், கோவில்கள், மத வழிபாட்டுத் தலங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படாது.

வாக்குச்சாவடியின் 200 மீட்டர் சுற்றளவுக்குள் எந்தவொரு அரசியல் கட்சி அலுவலகமும் இருக்கக்கூடாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் ஒரே பிரிவில் வாக்களிக்கும் வகையில் வாக்காளர் பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்