களப் பணியை அதிகரிக்கவும்; தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்

களப் பணியை அதிகரிக்கவும்; தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்

2 mins read
சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது
4373df53-a883-4fb5-bcb0-607d0fc2f0e1
தவெக வேட்பாளர்களுக்குத் தொண்டர்கள் முழுமையான ஒத்துழைப்பைத் தர வேண்டும் என்று விஜய் கேட்டுக்கொண்டார். - படம்: டெக்கான் கிரானிக்கல்

சென்னை: தமிழ் நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தவெக தலைவர் விஜய் கட்சித் தொண்டர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்

“அடுத்த 10 நாள்களுக்குத் தொண்டர்கள் காலை, மாலை என இரு வேளையும் மக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று தவெக வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் வையுங்கள். களப் பணியை அதிகமாக்குங்கள்,” என்று திரு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக விஜய் ‘எக்ஸ்’ தளத்திலும் பதிவிட்டுள்ளார்.

“மாற்றத்திற்கான நமது வெற்றிப் பாதையில் சரியாகப் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். ‘வாகை சூடும் வரலாறு திரும்பும்’ பயணத்தில் தொண்டர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அளப்பரியது, இன்றியமையாதது,” என்று அவர் குறிப்பிட்டார்.

“தேர்தல் நாள் வேகமாக நெருங்கி வரும் இந்த வேளையில் ஒரு வேண்டுகோள். வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களாகத் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டு அனைவரும் களத்தில் இறங்கிப் பணியாற்றுங்கள்,” என்று விஜய் கேட்டுக்கொண்டார்.

“அடுத்த 10 நாட்களும் தமிழ்நாட்டு மக்களை வீட்டுக்கு வீடு தேடித் தேடி நேரில் சந்தியுங்கள். தவெக வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் வையுங்கள். இந்தக் களப்பணியில் தன்னார்வலர்களாக உங்களை இணைத்துக் கொள்ளுமாறு பேரன்புடன் கேட்டுக் கொள்கிறேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

தவெக சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்குத் தொண்டர்கள் முழுமையான ஒத்துழைப்பைத் தாருங்கள், அனைவரையும் அரவணைத்துத் தேர்தல் பணியாற்றுங்கள் என்றும் திரு விஜய் சொன்னார்.

“இந்தத் தேர்தல் நமக்கானது மட்டுமல்ல, மாபெரும் மாற்றத்திற்கான, ஒரு தலைமுறைக்கான தேர்தல் என்பதை மக்களிடம் விளக்குங்கள்,” என்று தொண்டர்களுக்கு அவர் நினைவூட்டினார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி, விஜய்யின் தவெக, சீமானின் நாதக என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

குறிப்புச் சொற்கள்