மேட்டூர்: காவிரி நீரில் காரத்தன்மை அதிகரித்துவிட்டதாக விவசாயிகளும் கரையோர கிராம மக்களும் தெரிவித்துள்ளனர்.
காவிரி நீரில் கழிவுநீர் அதிகம் கலப்பதால்தான் காரத்தன்மை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வந்து சேரும் தண்ணீரில் கடந்த சில நாள்களாக காவிரி தண்ணீர் அதிகரித்து வரும் நிலையில், அதிலுள்ள மீன்கள் ஓடைகள் வழியாக வெளியேறுகின்றன. இதனால் ஓடைகளுக்கு அருகே வசிக்கும் கிராம மக்கள் மீன்பிடிக்க குவிகின்றனர்.
தற்போது கர்நாடகாவில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
தண்ணீர் வரத்து அதிகம் இருப்பதைப் பயன்படுத்தி, கழிவுநீர் அதிகம் கலக்கப்படுவதால் காவிரி நீரின் காரத்தன்மை அதிகரித்துவிட்டது.
மேட்டூர் அணையில் உள்ள மீன்கள், ஓடை வழியாக வெளியேறுவதாகவும் பாலமலை ஓடையில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்த போதிலும், இந்த மீன்கள் எதிர்நீச்சல் போட்டுச்செல்வதாகவும் கூறப்படுகிறது.
தினமும் ஏராளமான ஓடைகளில் லட்சக்கணக்கான மீன்கள் படையெடுத்துச் செல்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பலர் ஓடையில் மீன்பிடிப்பதாகவும் கடந்த இரு நாள்களில் மட்டும் நான்கு டன் மீன்கள் பிடிபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.