காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்: அரசு ஊழியர் கூட்டமைப்பு அறிவிப்பு

2 mins read
4e1f9d10-3576-4ade-99d6-6ca821392858
கடந்த நவம்பர் 18ஆம் தேதி அரசு ஊழியர்கள் ஒரு நாள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களின் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டது. - படம்: மாலை மலர்

சென்னை: எதிர்வரும் ஜனவரி 6ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கங்களும் இணைந்துள்ள ‘ஜாக்டோ-ஜியோ’ கூட்டமைப்புப் போராட்டம் நடத்துவது என்ற முடிவில் இருந்து பின்வாங்காது என அந்த அமைப்பின் மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளர் அமிர்த குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பழைய ஓய்வூதியத் திட்டம் நீடிக்க வேண்டும் என்பதே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் முதன்மைக் கோரிக்கை எனக் குறிப்பிட்ட அவர், இதை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆட்சிப் பொறுப்பு ஏற்றதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், பதவி ஏற்ற பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாம் கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டார் என்றும் இதை அவருக்கு நினைவுபடுத்த கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுவிட்டன என்றும் திரு.அமிர்த குமார் குறிப்பிட்டார்.

“எனினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்திவிட்டால் 70 விழுக்காடு பிரச்சினைகள் சரியாகிவிடும்.

“ஜார்க்கண்ட், கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் தேர்தல் நேரத்தில் ஓய்வூதியத் திட்டம் குறித்து எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. எனினும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர்,” என்றார் அமிர்த குமார்.

எனவே, இறுதிக்கட்டமாக வரும் 29ஆம் தேதி ஆட்சியர் அலுவலகங்கள் முன் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்த அவர், அதன்பின்னர் ஜனவரி 6ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கும் என அறிவித்தார்.

தமிழக சட்டப் பேரவைக்கு, அடுத்த நூறு நாள்களுக்குள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசு ஊழியர்களின் இந்த திடீர் வேலை நிறுத்தப் போராட்டமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு சுமுக தீர்வு காணாவிட்டால், ஆளும் திமுக தரப்புக்கு அது பின்னடைவாக அமையக்கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

அதே வேளையில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றும் அரசியல் கள ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்