சுதந்திர தின விழா: சென்னையில் பாதுகாப்புப் பணியில் 9,000 காவல்துறையினர்

1 mins read
dc04bda6-61ac-4cd5-8f06-b67045dd2139
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. - படம்: தி இந்து

சென்னை: நாடு முழுவதும் வரும் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.  தமிழகத்தில் சென்னை கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுகிறார்.

இதையொட்டி, சுதந்திர தினவிழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கொண்ட ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையர்கள் கண்ணன் (தெற்கு), சுதாகர் (போக்குவரத்து), நரேந்திர நாயர் (வடக்கு) ஆகியோர் மேற்பார்வையில், 9,000 காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரைப் பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் இதர முக்கிய இடங்களில் கூடுதலாக காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டு, தீவிர சோதனைகள், கண்காணிப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இது தவிர சென்னையிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர் முழுவதும் அந்தந்த காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நான்கு சக்கர, இருசக்கர சுற்றுக்காவல் வாகனங்கள் மூலம் சுற்றுக்காவல் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு, முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் மூலம் தீவிர வாகனச் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்