ராமேசுவரம்: இலங்கை மலையகத் தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்கு இந்தியா சார்பில் ரூ.60 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான புரிந்துணர்வுக் கடிதத்தை இலங்கைக்கான இந்தியத் தூதர் சந்தோஷ் ஜா, இலங்கை கல்வி அமைச்சின் செயலர் திலகா ஜெயசுந்தர ஆகியோர் பரிமாறிக் கொண்டனர்.
இந்திய வம்சாவளியினரான இலங்கை மலையகத் தமிழர்கள், அந்நாட்டில் குடியேறி 200 ஆண்டுகள் (1823-2023) ஆகின்றன. இதை நினைவுகூறும் வகையில், அங்கு கடந்த ஆண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அப்போது இந்தியா சார்பில் மலையகத் தமிழர்களின் வளர்ச்சிக்காக ரூ.75 கோடி நிதி உதவி வழங்கப்பட்டது. அச்சமயம் மலையகத் தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் இந்திய அரசு உதவ வேண்டும் என இலங்கையின் மலையக கட்சித் தலைவர்களான செந்தில் தொண்டமான், மனோ கணேசன் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர்.
தற்போது இந்திய அரசு வழங்கியுள்ள நிதியைக் கொண்டு மலையகப் பகுதியில் உள்ள இரு மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்பது கல்வி நிறுவனங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.
மேலும், இலங்கையில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 110 பேருந்துகள், வட மாகாணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள 40 மின் நூலகங்கள், 9 மாகாணங்களில் ஆங்கில மொழி ஆய்வகங்கள், உருகுனை பல்கலைக்கழகத்தில் ரவீந்திரநாத் தாகூர் நினைவு அரங்கம், 200 பள்ளிகளில் நவீன வகுப்பறைகள், கணினி ஆய்வகங்கள் நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் இந்தியத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

