தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா - பாகிஸ்தான் போர்: முக்கிய நகரங்களில் தீவிர கண்காணிப்பு

3 mins read
56c7bdc8-b76a-4b31-a4b0-5c60080be9ab
இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் காவல்துறை விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறை கண்காணிப்புச் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: கடந்த ஏப்ரல் மாதத்தில் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அந்தத் தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவம் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ என்னும் பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுத்தது. அந்தத் தாக்குதலில் தீவிரவாதிகளின் 9 முகாம்கள் தகர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் மீதான தாக்குதலை ஒட்டி இந்தியாவின் முக்கிய நகரங்களில் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

போர்ப் பதற்றம் எதிரொலியாக, இந்தியத் தலைநகர் புதுடெல்லி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி டெல்லி நகரின் வரலாற்று நினைவுச்சின்னங்களைச் சுற்றி காவல்துறையினர் பாதுகாப்பை வலுப்படுத்தி வருகின்றனர். மேலும் தென்னிந்திய நகரங்கள் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில், செங்கோட்டை மற்றும் குதுப் மினார், தாஜ்மகால் போன்ற அடையாளச் சின்னங்களுக்கு அருகில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்தப் பகுதிகளில் கூடுதல் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இப்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு மேம்படுத்தப் பட்டுள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிசிடிவி கண்காணிப்புக் கருவி மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து, நாடு முழுவதும் கிட்டத்தட்ட 200 இடங்களில் போர் ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டு, பல்வேறு பகுதிகளில் கடந்த புதன்கிழமை போர் ஒத்திகை நடைபெற்றது.

சென்னையில் கல்பாக்கம் அணுமின் நிலையம், துறைமுகத்தில் போர் ஒத்திகை நிகழ்த்தப்பட்டது. இந்நிலையில், சென்னையின் முக்கிய பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக அண்ணாசாலை, ஈவெரா பெரியார் சாலை, காமராஜர் சாலை, வணிக வளாகங்கள், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், முக்கிய கோயில்கள் உட்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையினர் கூடாரங்கள் அமைத்துத் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சந்தேகப்படும்படி திரிந்து கொண்டிருப்போரின் நடமாட்டத்தையும் காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

தெலுங்கானா

தெலுங்கானா முதல்வர் ஏ.ரேவந்த் ரெட்டி, போர்ப் பதற்றம் காரணமாக, ஹைதராபாத்தில் பாதுகாப்பு குறித்து ஒருங்கிணைந்த தளபத்திய நிலையத்தில் அவசரச் சந்திப்புக் கூட்டத்தை நடத்தினார்.

தெலுங்கானாவில் உள்ள மத்திய, மாநில அரசின் கட்டடங்களில் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்த நடவடிக்கைகள் குறித்து அவர் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பேச்சு நடத்தினார்.

அத்துடன் அவசர காலத்தைச் சமாளிப்பதற்காக அரசாங்க ஊழியர்கள் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

மேலும், அவசரச் சேவைகளில் ஈடுபட்டு வரும் அரசாங்க ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோரின் விடுப்புகள் ரத்து செய்யப்படுவதாக அவர் கூறினார்.

அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் தங்களது வெளிநாட்டுப் பயணங்களை ஒத்திவைக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

குறிப்புச் சொற்கள்