இந்தியா - இலங்கை கப்பல் சேவை ஓராண்டு நிறைவு; மாணவர்களுக்குச் சிறப்புச் சுற்றுலாத் திட்டம் அறிமுகம்

2 mins read
60a4ba32-598b-4504-bce4-82824077530e
கடந்த ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. - படம்: ஊடகம்
multi-img1 of 2

நாகப்பட்டினம்: இந்தியா - இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவேறியுள்ளது.

இந்நிலையில், இச்சேவையை வழங்கும் தனியார் நிறுவனத்தின் இயக்குநர் சுந்தரராஜன், இந்தப் புதிய ஏற்பாடு காரணமாக, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மேம்பட்டுள்ளது என்றார்.

மேலும், சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்காக ரூ.9,999 சிறப்புச் சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் அவர் செயதியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது.

இந்தியக் கப்பல் கழகத்துக்குச் சொந்தமான ‘சிரியாபாணி’ என்ற கப்பல் முதலில் இயக்கப்பட்ட நிலையில், பருவநிலை உள்ளிட்ட சில காரணங்களால் இந்தச் சேவை திடீரென நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, தனியார் நிறுவனம் ஒன்று இந்தச் சேவையை வழங்க முன்வந்ததை அடுத்து, 150 பேர் பயணம் மேற்கொள்ளும் வகையில், ‘சிவகங்கை’ என்ற சிறிய கப்பல் இயக்கப்பட்டது.

“மாணவர்களுக்கான சிறப்புத் திட்டம் ஆறு மாத காலத்திற்கு நீடிக்கும். இரு இரவுகள், இலங்கையில் தங்கும் வகையிலான பயணத் திட்டத்தில், பயணச்சீட்டுக் கட்டணம், உணவு, தங்குமிடம், வாகன வசதி என அனைத்தும் அடங்கும்.

“கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இரவு நேரத்தில் ஒரு ரயில் மட்டுமே சென்று கொண்டிருந்த நிலையில், இந்தக் கப்பல் சேவை தொடங்கப்பட்ட பின்னர், பிற்பகல் வேளையில் குளிரூட்டி வசதியுடன் கூடிய ரயில் இயக்கப்படுகிறது,” என்று திரு சுந்தரராஜன் தெரிவித்தார்.

இரு நாட்டு மக்களும் அதிக அளவில் ஆன்மிகப் பயணம் மேற்கொள்வதாகவும் பயணியர் கப்பல் சேவையால் இரு நாட்டு மக்களிடையே உறவு வலுவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு 20,000 பேர் பயணம் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வருங்காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்