புதுடெல்லி: போர் வாகனங்கள் வாங்கவும் மற்றும் இணைந்து தயாரிக்கும் போர் விமான இயந்திர ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்தும் அமெரிக்காவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி இவ்வாரம் அதிபர் டோனல்ட் டிரம்பை சந்திக்க இருப்பதை நன்கு அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி நாடான இந்தியா, பாரம்பரியமாக ரஷ்யாவையே நம்பியுள்ளது.
கடந்த மாதம் இரண்டு நாள் பயணமாக வாஷிங்டன் சென்ற பிரதமர் மோடியிடம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கூடுதல் பாதுகாப்பு உபகரணங்களை வாங்கி, நியாயமான வர்த்தக உறவை நோக்கிச் செல்லுமாறு திரு டோனல்ட் டிரம்ப் கேட்டுக் கொண்டார்.
இந்தியாவும் அமெரிக்காவும் அமெரிக்க ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஜெனரல் டைனமிக்சால் தயாரிக்கப்பட்ட ‘ஸ்ட்ரைக்கர்’ போர் வாகனங்களை இணைந்து தயாரிப்பது குறித்தும் நீண்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
2023ல் ஒப்பந்தம் செய்யப்பட்ட இந்திய விமானப்படைக்கு இந்தியாவில் போர் விமான இயந்திரங்களை இணைந்து தயாரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை இறுதி செய்யவும் இரு நாட்டின் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
“அமெரிக்காவுடன் செய்ய விரும்பும் பரிவர்த்தனையை விரைவுபடுத்த நாங்கள் விரும்புகிறோம்,” என்று தற்காப்பு உற்பத்திச் செயலாளரான சஞ்சீவ் குமார் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
அத்தகைய முயற்சிகள் நடந்து வருவதாகவும் அவர் கூறினார். ஆனால் அது பற்றி அவர் விவரிக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப்புக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் இரண்டு சாத்தியமான ஒப்பந்தங்கள் இடம்பெறுமா என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை. வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இந்தியா தற்காப்புக் கருவிகளைத் தயாரிப்பதிலும் அதை ஏற்றுமதி செய்வதிலும் இனி அதிக கவனம் செலுத்தும் என்று அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஆகப் பெரிய விமானக் கண்காட்சி பெங்களூரில் திங்கட்கிழமை (பிப்ரவரி 10) தொடங்கியது. அப்போது இதுகுறித்து ராஜ்நாத் சிங் பேசினார்.
ஆயுதங்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக இருக்கும் இந்தியா, எதிர்காலத்திற்கு ஏற்றவாறு தனது ராணுவத்தை நவீனமாகவும் அதேநேரம் உள்ளூரில் ஆயுதங்களைத் தயாரிக்கவும் எண்ணம் கொண்டுள்ளது.
இந்தியாவுக்கு போட்டியாகத் திகழும் சீனா அதன் ராணுவ பலத்தை அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலும் தெற்கு ஆசியாவிலும் அதன் செல்வாக்கை வலுப்படுத்தி வருகிறது. அதனால் தற்போது இந்தியா நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.
இவ்வாண்டுக்கான நிதியாண்டில் மட்டும் இந்தியாவின் உள்நாட்டு ஆயுத தயாரிப்பின் மதிப்பு 14.2 பில்லியன் அமெரிக்க டாலர் என்றும் ஆயுத ஏற்றுமதி முன்னெப்போதும் இல்லாத அளவில் 2.3 பில்லியன் டாலருக்கு செய்யப்பட்டுள்ளது என்றும் ராஜ்நாத் தெரிவித்தார்.
இனிவரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.