கரூர்: விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் பலியான துயரச் சம்பவத்தை அடுத்து, முதல்வர் ஸ்டாலின் கரூர் விரைவதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கூட்ட நெரிசலில் பலர் பலியானதாக வெளியான தகவலை அடுத்து, அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
உடனடியாக உரிய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை (செப்டம்பர் 27) இரவே தனி விமானத்தில் கரூர் செல்வதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் தமது சமூக ஊடகப் பக்கத்தில், கரூர் துயரச் சம்பவம் குறித்து வெளிவரும் தகவல்கள் தமக்கு மிகுந்த கவலை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் ஆகியோரைத் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.
“அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷிடம் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவிகளைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன்.
“பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல்துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.
கரூர் விரையும் உதயநிதி
இந்நிலையில், சனிக்கிழமை இரவு துபாய் செல்லத் திட்டமிட்டிருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமது பயணத்தை ரத்து செய்தார். அவர் அன்றிரவே கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதிக்குச் செல்லவிருப்பதாகத் தகவல் வெளியானது.