சென்னை: கட்சித் தலைமையுடனான கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வரும் நிலையில், அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விலக இருப்பதாக வெளியான தகவல், அக்கட்சி வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் பழனிசாமி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்து வந்தார் செங்கோட்டையன். பிறகு இவ்விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், பழனிசாமி, செங்கோட்டையன் இடையேயான மோதல் பெரிதாகிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ், சுவரொட்டி, பதாகைகள் என எதிலும் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறுவதில்லை எனப் பல மாதங்களுக்கு முன்பே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் செங்கோட்டையன்.
இந்தப் புறக்கணிப்பு நீடித்து வருவதாக செங்கோட்டையன் தரப்பு குறைகூறியுள்ளது.
இம்முறை கொங்கு மண்டலமான கோவையில் இருந்துதான் பழனிசாமியின் பிரசாரப் பயணம் தொடங்கியுள்ளது. ஆனால், அதே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவரான செங்கோட்டையன், பழனிசாமி பங்கேற்ற எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில், அவர் அதிமுகவில் இருந்து விலக இருப்பதாகக் கூறப்படுகிறது.
“செப்டம்பர் 5ஆம் தேதி நான் மனம் திறந்து பேசப் போகிறேன். எனது ஆதரவாளர்களுடன் தீவிர கலந்தாலோசனையில் ஈடுபட்டுள்ளேன். அனைவரும் அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும்,” என செங்கோட்டையன் கூறியதாக ஏசியாநெட் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.