நெருங்கும் தீபாவளி.. தீக்காய சிறப்பு உள்நோயாளிகள் பிரிவு தொடக்கம்

2 mins read
6ac45a12-c56b-4184-9130-dc2077b22bb3
கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் தீக்காயச் சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பிரிவு. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தீபாவளியை முன்னிட்டு, தீக்காயச் சிறப்பு உள் நோயாளிகள் பிரிவை தொடங்கிவைத்தார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மாணவிகள் சார்பில் தீபாவளி விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீபாவளி தீக்காயச் சிறப்பு உள் நோயாளிகள் பிரிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசுகையில், “முதல்வர் வழிகாட்டுதலோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தீபாவளி நேரங்களில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் பாதிப்பு என்பது தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை தனியார்மயமாக மாற்றப்படுகிறது எனும் செய்தி உண்மை அல்ல. சமூக வலைத்தளங்களில் அது தவறாகப் பரப்பப்படுகிறது,” என்றார்.

பட்டாசு வெடிக்கும்போது இளையர்கள் மற்றும் குழந்தைகள் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், “ஒவ்வோர் ஆண்டும் தீக்காயம் சிறப்பு சிகிச்சைப் பிரிவு ஒன்றைத் தொடங்கி வைப்பது என்பது வழக்கம். அந்த வகையில் திங்கட்கிழமை (அக்டோபர் 28) தீபாவளி தீக்காயச் சிறப்பு நோயாளிகள் பிரிவு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

“ஆண்களுக்கு 12 படுக்கைகளுடன் ஒரு பிரிவு, பெண்களுக்கு 8 படுக்கைகளுடன் ஒரு பிரிவு, குழந்தைகளுக்கு ஐந்து படுக்கைகளுடன் ஒரு பிரிவு என மொத்தமாக 25 படுக்கை வசதிகளுடன் தீவிர சிகிச்சைப் பிரிவு ஒன்று தீபாவளிக்காக பிரத்தியேகமாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

“தீக்காயச் சிகிச்சைக்காக அண்டை மாநிலங்களிலிருந்தும் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆண்டுதோறும் 2 ஆயிரம் என்ற அளவுக்கு தீக்காய நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள். தீபாவளி நேரங்களில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்து இந்தாண்டும் இரண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன,” என்று தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்