அறுவை சிகிச்சை இல்லாமல் ஆறு வயது சிறுமியின் கல்லீரலிலிருந்த நீர்க்கட்டி, உட்காண் அறுவைச் சிகிச்சை (laparoscopic surgery) வழியாக அகற்றப்பட்டது.
தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் மருத்துவக்குழுவினர் இந்தச் சாதனை முயற்சியை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒரத்தநாடு அருகே சேதுராயன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியின் பெண் பிள்ளைக்குக் கடும் வயிற்றுவலி ஏற்பட்டதை அடுத்து, சிறுமியை ராசா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
சிறுமியின் கல்லீரலில் நீர்க்கட்டி இருந்தது மருத்துவப் பரிசோதனையின் வழி தெரியவந்தது. தொடர்ந்து சிறுமிக்கு ரத்தப்பரிசோதனை, எம்ஆர்ஐ உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
உட்காண் அறுவைச் சிகிச்சைவழியாக மருத்துவ நிபுணர்கள், சிறுமியின் வயிற்றில் மூன்று துளைகள் இட்டு, கல்லீரலில் இருந்த 150 கிராம் எடை கொண்ட நீர்க்கட்டியை முற்றிலுமாக அகற்றினர்.
அகற்றப்பட்ட கட்டியை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்தக் கட்டி அகற்றப்படாமல் இருந்தால், சிறுமிக்கு மஞ்சள்காமாலை ஏற்பட்டு, பின்னர் புற்றுநோய்க்கு ஆளாகியிருக்கக்கூடும் என்று அவர்கள் கூறினர்.
தனியார் மருத்துவமனையில் ரூ.7 லட்சம் செலவாகக்கூடிய இந்தச் சிகிச்சை, தமிழக முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் மூலம் இலவசமாகச் செய்யப்பட்டுள்ளது. முழுமையாகக் குணமடைந்த நிலையில் சிறுமி வீடு திரும்பியுள்ளார்.

