சென்னை: தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ள 12,921 உணர்வுபூர்வமான இடங்களை ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப் படையினர் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவக்கூடும் எனக் கருதப்படும் பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காத வண்ணம் சுற்றுக்காவலும் கண்காணிப்பு நடவடிக்கையும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையிலான ஏழு நாள்களில் மட்டும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 252 புகார்கள் மீது ‘சிங்கப்பெண்’ படையினர் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், படையினர் சேகரித்த முக்கியத் தகவல்களின் அடிப்படையில் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒரே வாரத்தில் காணாமல்போன பெண்கள், குழந்தைகள் உட்பட ஏழு பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதேபோல், சட்டவிரோதமாக நடத்தப்படவிருந்த ஏழு குழந்தை திருமணங்கள் சரியான நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
பள்ளியிலிருந்து இடைநின்ற 53 சிறார்களை மீட்ட அதிரடிப் படையினர், அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கண்காணிப்புப் பணிகள் மட்டுமின்றி, பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் 3,391 இடங்களில் பெண்கள் பாதுகாப்பு, குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் ‘சிங்கப்பெண்’ படையினர் நடத்தியுள்ளனர்.


