சென்னை: தமிழ்நாட்டைப் போதை இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கில், மாநிலம் தழுவிய அளவில் நேற்று ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த அதிரடிச் சோதனையில் 344 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 242.2 கிலோ கஞ்சா, 19.8 கிலோ ஹஷிஷ் உள்ளிட்ட பெருமளவிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர், தளபத்திய அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்தது.
காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில், குற்றப்புலனாய்வுத் துறை கூடுதல் டிஜிபி மேற்பார்வையில் 38 மாவட்டங்கள், ஒன்பது மாநகரங்களில் இச்சிறப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தலைமறைவாக இருந்த 64 குற்றவாளிகள் பிடிபட்டதுடன், 44 பிடியாணைகளும் வழங்கப்பட்டு மொத்தம் 283 வழக்குகள் பதிவாகின.
ராமநாதபுரம் கடற்கரைப் பகுதியில் கிட்டத்தட்ட 19.8 கிலோ ஹஷிஷ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, திருவாடானையைச் சேர்ந்த மனோ, 34, கைது செய்யப்பட்டார்.
கல்வி நிறுவனங்களுக்கு அருகிலுள்ள பகுதிகள் உட்பட 3,242 முக்கியப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், 890 மாணவர் விடுதிகளிலும் ஒரே நேரத்தில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன.
வடகிழக்கு மாநிலங்களிலிருந்து இயக்கப்படும் 357 ரயில்களில் மோப்ப நாய்களின் உதவியுடன் நடத்தப்பட்ட சோதனையில் 104.36 கிலோ கஞ்சா சிக்கியது. எல்லைச் சாவடிகளில் 23,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டிருந்த ஏறக்குறைய 6,958 கிலோ கஞ்சா, மெத்தம்பெட்டமைன் ஆகியவை எரியூட்டி அழிக்கப்பட்டன.
குற்றவாளிகளின் சொத்துகள், வங்கிக் கணக்குகளை முடக்கும் நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.
பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த 3,972 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதோடு, 175 மறுவாழ்வு மையங்களும் ஆய்வு செய்யப்பட்டன. சட்டவிரோதப் புழக்கத்தைத் தடுக்கப் பொதுமக்கள் ‘டிரக்ஃப்ரீடிஎன் (Drug Free TN) செயலி, 10581 கட்டணமில்லா எண், 94984 10581 வாட்ஸ்அப் எண் வழியே ரகசியத் தகவல்களைத் தெரிவிக்கலாம் எனக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
