புதுடெல்லி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இருதரப்பும் சமரசமாகப் பேசி முடிவெடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து, தன்னைப் பாலியல் ரீதியில் பயன்படுத்திக்கொண்டு, பின்னர் ஏமாற்றிவிட்டார் சீமான் என்பதுதான் நடிகை விஜயலட்சுமி எழுப்பியுள்ள புகார்.
கடந்த 2011ஆம் ஆண்டு அவர் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகார் கடந்த காலங்களில் அவ்வப்போது பரபரப்பையும் சில விவாதங்களையும் ஏற்படுத்தி வந்தது. தற்போது ஏறக்குறைய 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இந்தப் பாலியல் புகார் வழக்கு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சீமான் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த தனி நீதிபதி, பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது எனக் குறிப்பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து, சீமான் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தபோது, சீமானின் அரசியல் பொதுவாழ்வுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவரது தரப்பில் வாதிடப்பட்டது.
நடிகை விஜயலட்சுமியுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய இழப்பீடு வழங்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, சீமான் மீதான பாலியல் வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை மே மாதத்துக்கு தள்ளி வைத்தனர்.
எனினும் இந்தக் கால அவகாசத்தை பயன்படுத்தி, விஜயலட்சுமிக்கு உரிய இழப்பீடு வழங்குவது தொடர்பாக இருதரப்பிலும் சமரசமாக பேசி முடிவெடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

