சென்னை: விளையாட்டுத் துறையில் தமிழகத்தை முதல் மாநிலமாகத் திகழச்செய்ய, புதிதாக அமையவிருக்கும் அனைத்துலக விளையாட்டு நகரம் உதவும் என்று மாநிலத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் சென்னைக்கு அருகே உலகத் தரத்திலான அனைத்துலக விளையாட்டு நகரத்தை அமைப்பதற்கான பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்றது.
திரு உதயநிதி அந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், அனைத்துலக விளையாட்டு நகரத்தை உருவாக்குவது தொடர்பாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை, நீர்வளத்துறை, வீட்டு வசதித்துறை, சென்னை மாநகராட்சி, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் உட்பட பல்வேறு துறைகளின் உயரதிகாரிகளிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டன.
அனைத்துலக விளையாட்டு நகரம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துவது, உள்கட்டமைப்பு வசதிகள், வடிவமைப்பு போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதுதொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “தமிழகத்தை விளையாட்டுப் போட்டிகளில் மட்டுமல்லாமல், விளையாட்டுத்துறை சார்ந்த கட்டமைப்பிலும் இந்தியாவின் முதல் மாநிலமாக்க வேண்டும் என்ற முதல்வரின் லட்சியத்துக்கு இந்த அனைத்துலக விளையாட்டு நகரம் முக்கியப் பங்காற்றும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

