தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேர்தல் விதிகள் திருத்தம் மக்களாட்சிக்கு அச்சுறுத்தல்: ஸ்டாலின் கண்டனம்

2 mins read
88975627-4e66-4bc7-9f57-9b9c45bb67dd
தேர்தல் விதிகள் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தேர்தல் விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வெளிப்படைத்தன்மையான தேர்தல் முறையை ஒழிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ள ஆபத்தான திருத்தத்தால் மக்களாட்சி மிகப்பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது என்று தமது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

“குறிப்பிட்ட வாக்குச்சாவடியின் சிசிடிவி காட்சிப் பதிவுகளை வழங்குமாறு பஞ்சாப் – ஹரியானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, சிசிடிவி பதிவுகளையும் தேர்தல் தொடர்பான பிற ஆவணங்களையும் பொது ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதைத் தடுக்க இந்தச் சட்டம் வகை செய்கிறது.

“இதன்மூலம், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளுள் ஒன்றினை பாஜக அரசு அழித்துள்ளது.

“தனது அமைப்பின் சுதந்திரத்துக்காகப் போராடுவதற்குப் பதிலாகத் தேர்தல் ஆணையமும் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் அழுத்தத்துக்கு மனமுவந்து பணிந்திருப்பதும், நேர்மையான – நியாயமான தேர்தல் எனும் தனது குழந்தையையே அது உருக்குலைத்திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது,” என்று ஸ்டாலின் கூறினார்.

நாட்டில் சுதந்திரமான – நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதன் மீது தொடுக்கப்பட்டுள்ள மக்களாட்சிக்கு விரோதமான இந்தத் தாக்குதலை பாஜக தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக தேர்தல் தொடர்பான வழக்கு ஒன்றில், மனுதாரருக்குத் தேவையான ஆவணங்களை வழங்க தேர்தல் ஆணையத்துக்கு பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதையடுத்து தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிகளில் சில திருத்தங்கள் மேற்கொண்டுள்ளது.

அதன்படி, குறிப்பிட்ட சில ஆவணங்கள் மட்டுமே பொது ஆய்வுக்கு கிடைக்கும், சிசிடிவி காட்சி, வேட்பாளர்களின் காணொளி காட்சிகள் போன்ற சில மின்னணு ஆவணங்களைப் பொது ஆய்வுக்கு வழங்க முடியாத வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்