சென்னை: தமிழகத்தை உலுக்கிய சிறுநீரக மோசடி வழக்கு விசாரணையைத் தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் நாமக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவர்களிடம் இருந்து சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளைப் பெற்று ஒரு கும்பல் மோசடி செய்தது.
சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகளைக் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் கொடையாக அளிப்பதில் தமிழகத்தில் சிக்கல் ஏதுமில்லை. அரசாங்கம் அதை அனுமதிக்கிறது.
மூளைச்சாவு அடைவோரிடம் இருந்து பெறப்படும் உறுப்புகள் தானம் கோரி, ஏற்கெனவே பதிவு செய்தவர்களுக்கு, உரிய வரிசைப்படி வழங்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப்படுத்துவதில், மாநில உறுப்பு மாற்று ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளது.
ஆனால், மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்களோ, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வகையிலும் உறவு அல்லாதவர்களிடம் உறுப்புக்கொடை பெற போலி ஆவணங்களை ஏற்பாடு செய்கிறார்கள். இதனால் இரு தரப்பிலிருந்தும் அவர்களுக்குப் பெரிய தொகை கிடைக்கும்.
அதிலும் சிறுநீரகத்தைக் கொடையாக அளித்தவர்களுக்கு 10 லட்சம் தருவதாகக் கூறிவிட்டு, அதில் பாதியைக்கூட வழங்கவில்லை எனத் தெரிகிறது.
அந்தச் சிறுநீரகத்தைக் கள்ளச்சந்தையில் விற்று ரூ.30 லட்சம் வரை லாபம் பார்க்கிறார்கள். இதுபோன்ற சம்பவம், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் நடந்தது. இதுகுறித்து தகவல் வெளியானதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, விரிவான விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
இதற்கிடையே, மகாராஷ்டிரா விவசாயிகளிடம், தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்களும் இணைந்து சிறுநீரக முறைகேட்டில் ஈடுபட்டதாக மற்றொரு குற்றச்சாட்டு எழுந்தது.
தொடர்புடைய செய்திகள்
இதை விசாரிக்க, மருத்துவ, ஊரக நலத்துறைக் கூடுதல் இயக்குநர் தலைமையில் சிறப்புக்குழு அமைத்தது தமிழக அரசு.
கடந்த சில வாரங்களாக இந்த விசாரணை தொய்வடைந்திருந்த நிலையில், மீண்டும் அதைத் தீவிரப்படுத்த மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

