மதுரை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சென்னை பனையூரில் நவம்பர் 27ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் சேர்ந்தார்.
திருப்பூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபாமா உள்பட செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் தவெகவில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், அண்மையில் அதிமுகவில் சேர்ந்த ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி வீட்டுத் திருமண விழா மதுரையில் நடந்தது. இந்தத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை மதுரை வந்தார்.
மதுரை மாவட்ட முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், அமைப்பு செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் கட்சியினர் மாபெரும் வரவேற்பு அளித்தனர்.
திருமண விழாவிற்கு வந்திருந்த பழனிசாமியிடம் செய்தியாளர்கள், செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “என்னிடம் ஏன் கேட்கிறீர்கள். அதை அவரிடமே கேளுங்கள். அவர் எந்தக் கட்சியில் சேர்ந்தால் எங்களுக்கு என்ன? அவர் அதிமுகவில் இல்லை. எனவே, இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை,” என்று கூறினார்.
இருப்பினும், செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்விகளைத் தொடுத்தனர். அப்போது “நான் என்று ஒருவன் நினைத்தால் ஆண்டவன், தான் எனத் தண்டிப்பார்,” என்று செங்கோட்டையன் உங்களை மறைமுகமாகத் தாக்கியிருக்கிறாரா என்று கேட்டனர். அதற்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “அது அவருடைய கருத்து, அதற்கெல்லாம் என்னிடம் பதிலை எதிர்பார்க்க வேண்டாம். அவர் அதிமுகவில் இல்லை. எனவே, அவரைப் பற்றி கருத்துச் சொல்வதற்கு எதுவுமில்லை,” என்று கூறிச் சென்று விட்டார்.
தவெகவின் வெற்றிக்காக பாடுபடுவேன்: செங்கோட்டையன்
இந்நிலையில், சென்னையில் தவெக மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “மக்களின் ஆதரவுடன் 2026 ஆம் ஆண்டில் ஆட்சிப் பீடத்தில் விஜய் அமர்வார். புதியவர்கள் ஆள வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே எழுந்துள்ளது. ஆட்சி மாற்றம் நிகழ விஜய்க்கு உதவுவேன். அதிமுகவில் இருந்து மேலும் சிலர் வருவது குறித்து இப்போதைக்கு தெரிவிக்க முடியாது. சொன்னால் பிரச்சினை வரும். ஆட்சி மாற்றத்தை உருவாக்கி விஜய் தலைமையில் தமிழகம் வெற்றிநடை போடுவதற்கு அயராது உழைப்பேன்,” என்று கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
நான் தவெகவில் சேர்ந்ததற்குக் காரணம் இருக்கிறது. திமுக, அதிமுக இரண்டுமே ஒன்றுதான். இரண்டும் ஒன்றாகவே பயணிக்கின்றன. அதனால்தான் நான் தவெகவில் இணைந்தேன்.
தூய்மையான ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என்பதற்காக நான் தவெகவில் இணைந்துள்ளேன். தவெகவிற்கு வெற்றியைத் தர மக்கள் காத்திருக்கிறார்கள். 2026 ஆம் ஆண்டில் மக்கள் புரட்சி ஏற்படும் என்று செங்கோட்டையன் கூறினார்.

