தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோமியம் குடிப்பது பாதுகாப்பானது அல்ல: இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை

2 mins read
66a6ff2c-1f80-4ec3-876b-527d845fa2cb
படம் - பிக்சாபே

சென்னை: கோமியம் எனப்படும் பசுமாட்டின் சிறுநீர் மனிதர்கள் குடிப்பதற்கு பாதுகாப்பானது அல்ல என்று இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய 40 வகையான பாக்டீரியாக் கிருமிகள் கோமியத்தில் உள்ளது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதைக் குடிப்பது உகந்தது அல்ல. அருந்தினால் பல மோசமான நோய்கள் ஏற்படும். அது வயிறு, குடல்களில் தொற்று உள்ளிட்ட நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பசுக்கள், எருமைகளின் சிறுநீர் மாதிரிகளை இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது.

கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும் என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையான நிலையில் அவ்வாறு பசுவின் கோமியத்தை குடிப்பது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமான மெட்ராஸ் ஐஐடியின் இயக்குநரே இப்படி மூடநம்பிக்கைக்குரிய வகையில் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற போலி அறிவியல் விஷயங்களை பரப்புவதை ஏற்க முடியாது என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். காமகோடி தான் சொன்ன கருத்தை மீட்டுக்கொள்ள வேண்டும், பொதுவெளியில் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் பல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

பொதுவாக பசு கோமியத்தை வீடுகளில் தெளிப்பது உண்டு. ஆனால் குடிக்கும் வழக்கம் இல்லை.

காமகோடிக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு மாணவர் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

“கோமியம் (மாட்டின் சிறுநீர்) குடித்தால் காய்ச்சல் சரியாகுமென அறிவியலுக்கு எதிரான, ஆதாரங்கள் இல்லாத பிற்போக்கு கருத்தை பேசியிருக்கிறார்.

“மாட்டின் சிறுநீர் என்பது மாட்டின் கழிவு, மேலும் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருக்கும் மாடாக இருந்தால் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய, நோயைப் பரப்பக்கூடிய நுண்ணுயிரிகள் அதில் இருக்கும். இதை மனிதர்கள் அருந்தினால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கும் நிலையில், அறிவியலை ஊக்குவிக்கவேண்டிய இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் அறிவியலுக்கு எதிராக பேசியிருப்பதை தமிழ்நாடு மாணவர் கழகம் கண்டிக்கிறது.

“தன் பேச்சுக்கான ஆதாரத்தை அவர் வெளியிட வேண்டும். தவறும் பட்சத்தில் தான் பேசியது தன்னுடைய சொந்த கருத்து என்றும், அறிவியல்படி தவறு என்றும் பொதுவெளியில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்