சென்னை: தமிழகத்தில் வலுவிழந்துவிட்டதால்தான் பாஜகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக தலைமை முன்வந்ததாகக் கூறப்படுவதை முற்றிலும் மறுப்பதாக பாஜக தமிழகத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக வலுவான கட்சி என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை என்றும் எந்தக் கட்சியையும் கூட்டணிக்குள் இழுக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என்றும் அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“திமுகவை ஆட்சியிலிருந்து இறக்குவதற்காக அமைந்துள்ள எங்கள் கூட்டணி அதன் நோக்கத்தில் வெற்றி பெறுவது உறுதி.
“எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் சீமான், விஜய் கட்சிகளை பாஜக பக்கம் இழுக்க திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
“பாஜகவைப் பொருத்தவரை வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை அகற்றுவதையே ஒரே இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய விரும்பும் கட்சிகளை வரவேற்கிறோம்.
“தேர்தல் பிரசாரம் எப்போது தொடங்கும் என்பது குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசி ஆலோசனை செய்து முடிவெடுப்போம். தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பிரசாரக் கூட்டம் பிரம்மாண்டமாக இருக்கும்,” என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
அதிமுக, பாஜக இடையே கூட்டணி உருவான பின்னர் பேட்டியளித்த மூத்த செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே, கூட்டணி ஆட்சிக்கு அதிமுக தலைமை சம்மதித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அதிமுக வட்டாரங்களில் சலசலப்பு நிலவியது. முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், நயினார் நாகேந்திரனும் கூட்டணி ஆட்சி குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார்.

