திமுக கூட்டணியில் இடதுசாரிகளுக்குக் கூடுதல் இடமில்லை என்பது நியாயமன்று: பெ. சண்முகம்

திமுக கூட்டணியில் இடதுசாரிகளுக்குக் கூடுதல் இடமில்லை என்பது நியாயமன்று: பெ. சண்முகம்

1 mins read
00dd6736-2343-45e3-81e0-fb5c4e503190
பெ. சண்முகம். - படம்: தினசுவடு
Google News Preferred Icon

சென்னை: திமுக கூட்டணியில் திடீர் சலசலப்பு நிலவி வருவதாகக் கூறப்படும் நிலையில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயலாளர்களும் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்ப்பதாக மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

திமுக கூட்டணியில் இடதுசாரிகளுக்குக் கூடுதல் தொகுதி வழங்க வாய்ப்பு இல்லை என்பது நியாயமன்று என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் எந்தநேரத்திலும் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்முறை தங்களுக்கு இரட்டை இலக்கங்களில் தொகுதி ஒதுக்க வேண்டும் என இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் விசிகவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்துத் திமுக தலைமைக்குத் தெரியப்படுத்தி உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் மாா்க்சிஸ்ட் எதிர்பார்க்கும் தொகுதிகளை ஒதுக்குவது சிரமம் எனத் தெரிவித்திருப்பதை ஏற்க முடியாது என்றார்.

“இதே சிரமத்துக்கு இடையேதான் காங்கிரஸ் கட்சிக்குக் கூடுதல் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. தேமுதிகவுக்குக் கூடுதல் இடங்கள் வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவ்வாறு இருக்கும்போது இடதுசாரிகளுக்குக் கூடுதல் தொகுதிகள் வழங்க வாயப்பு இல்லை என்பது நியாயமன்று,” என்றார் பெ.சண்முகம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறுகையில், “கூட்டணிக் கட்சிகளுடனான ஜனநாயகபூர்வமான உரையாடலுக்குத் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இடமளிக்கிறார். எனவே, அவரிடம் கூடுதல் தொகுதி ஒதுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளோம்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்