திருப்பூர்: தமிழ்நாட்டு முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ ஜூலை 23ஆம் தேதி திரைகாணவுள்ளது.
அதனை முன்னிட்டு, ரசிகர்களுக்கான தனித்துவ டி-சட்டை தயாரிப்பில் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் இரவும் பகலுமாக ஈடுபட்டு வருகின்றன.
பல மாத சட்டப் போராட்டங்கள், இணையத் திருட்டு, தணிக்கை எனப் பல சிக்கல்களைக் கடந்து ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகிறது.
இதனையடுத்து, முதல்வரின் உருவப்படத்தையும் ‘ஜனநாயகன்’ பெயரையும் தாங்கிய டி-சட்டை வேண்டுமென ரசிகர்கள் அதிக அளவில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்காகத் திருப்பூரில் உள்ள பல பின்னலாடை நிறுவனங்கள் தங்களின் வழக்கமான பணி நேரத்தைத் தாண்டி, இரவு பகலாகத் தங்களின் ஊழியர்களைக் கொண்டு கூடுதல் நேரம் வேலை செய்து வருகின்றன.
தற்போது திருப்பூரில் எழுநூற்றுக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் இந்த ஆடைத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
“இப்படி ஒரு மனக்கிளர்ச்சியை, களிப்பைப் பார்த்ததே இல்லை,” என்றார் உள்ளூர் ஆடை நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் கே.செல்வநாதன்.
முதல்வர் விஜய்யின் அரசியல் பயணத்தைப் போற்றும் வகையிலான முழக்கங்களும் அந்த ஆடைகளில் அச்சிடப்பட்டு வருவதாக ‘எக்கனாமிக் டைம்ஸ்’ செய்தி தெரிவிக்கிறது.
நெருக்கடியைச் சமாளிக்க அங்குள்ள அச்சுப் பணியாளர்கள் சுழற்சி முறையில் கூடுதல் நேரம் உழைத்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் விரைவு அஞ்சல் சேவை மற்றும் நேரடி ரொக்க விநியோக வசதிகளுடன் டி-சட்டைகள் அனுப்பப்படுகின்றன.
தமிழ்நாடு மட்டுமன்றி, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவிலிருந்தும் டி-சட்டை கேட்டு அதிகக் கோரிக்கைகள் வந்துள்ளன.
வழக்கமாக, திருப்பூர் ஆலைகள் வெளிநாட்டு ஏற்றுமதிகளுக்கும் பண்டிகைக் காலத் தேவைகளுக்கும் மட்டுமே இதுபோன்ற கூடுதல் நேரப் பணிகளை மேற்கொள்ளும்.
“விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பில் ஐந்நூறு டி-சட்டைகளை அனுப்பி வைக்கும்படி ஒரு திருப்பூர் ஆடை நிறுவனத்திடம் கேட்டுள்ளோம். படம் வெளியாவதற்குமுன் அவை கிடைத்துவிடும் என எதிர்பார்க்கிறோம்,” என்று சென்னையைச் சேர்ந்த ஜெயந்த் என்ற ரசிகர் தெரிவித்தார்.
அவரைப் போன்றவர்கள், ‘ஜனநாயகன்’ வெளியீட்டை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகப் பார்க்கின்றனர்.
தமிழகத் திரைப்பட விநியோகிப்பாளர் சங்கத்தின்படி, ‘ஜனநாயகன்’ திரைப்படம் அம்மாநிலத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

