மதுரையில் பூட்டை உடைக்காமல், சுவரில் துளையிடாமல் நகைக்கடையில் கொள்ளை

மதுரையில் பூட்டை உடைக்காமல், சுவரில் துளையிடாமல் நகைக்கடையில் கொள்ளை

ரூ.35 கோடி மதிப்பிலான 500 பவுன் தங்கம் திருட்டு
படம்: ஒன்இந்தியா

12 Nov 2026 - 6:54 pm

1 mins read

மதுரை: மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட தனிஷ்க் ஜூவல்லரியில், ஏறக்குறைய 35 கோடி ரூபாய் மதிப்பிலான 500 பவுன் (சவரன்) தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மிகவும் பரபரப்பான சாலையில் அமைந்துள்ள அக்கடை15 நாள்களுக்கு முன்னர் திறக்கப்பட்டது. கடையின் திறப்பு விழா இன்னும் நடத்தப்படவில்லை. கடையின் உள்புறப் பணிகளும் முழுமையாக நிறைவடையாமல் இருந்த நிலையில் கொள்ளை நடந்துள்ளது.

வியாழக்கிழமை (நவம்பர் 12) காலை வழக்கம்போல் கடையைத் திறக்க வந்த ஊழியர்கள், அங்கிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கடையின் பூட்டை உடைக்காமலும், சுவரில் துளையிடாமலும் கொள்ளையர்கள் உள்ளே புகுந்திருப்பது காவல்துறையினருக்குப் பெரும் சவாலாக உள்ளது. புதன்கிழமை இரவு முகமூடி அணிந்த மர்ம நபர் அல்லது கும்பல் கடையின் பின்பக்க வழியாகவோ, மாடியில் உள்ள மின்தூக்கி (லிஃப்ட்) வழியாகவோ அல்லது மின்விசிறிப் பொருத்தும் துளை வழியாகவோ உள்ளே நுழைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

நகைக்கடை மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளைக் கைப்பற்றி காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்