மதுரை: மதுரை பழங்காநத்தம் புறவழிச் சாலையிலுள்ள தனியார் (தனிஷ்க்) நகைக்கடையில், கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 12) அதிகாலை மின்தூக்கி அமைப்புக்கான துளை வழியாக நுழைந்த மர்ம நபர் ஏறக்குறைய 15 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றார்.
இதுகுறித்து தனிப்படைகள் அமைத்து கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளையர் நிஷாந்த் அக்கொள்ளையில் ஈடுபட்டதைக் கண்டறிந்தனர். ஒரு வாரத்திற்கு முன்பே அவர் கடைக்குள் நுழைந்து ஒத்திகை பார்த்ததும் விசாரணையில் தெரியவந்தது.
தலைமறைவான நிஷாந்தின் வீட்டில் சோதனை நடத்திய காவல்துறையினர், அவரது தந்தையான ஆட்டோ ஓட்டுநர் சுரேஷிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, நிஷாந்தின் தோழியும் திருப்பாலையைச் சேர்ந்த யூடியூபருமான மீனாட்சி நாச்சியாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கும் அக்கொள்ளையில் தொடர்பு இருப்பது உறுதியானது.
மேலும், மீனாட்சி அளித்த தகவலின் பேரில் மாடக்குளம் கண்மாய்ப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கொள்ளையடிக்கப்பட்ட பத்து கிலோ தங்க நகைகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சுரேஷ், மீனாட்சி நாச்சியார் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சங்கீதா, இருவரையும் வரும் நவம்பர் 29ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
எஞ்சிய நகைகளுடன் திருப்பூர் வழியாகத் தப்பிச் சென்ற முக்கியக் குற்றவாளியான நிஷாந்தை காவல்துறையின் தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், நிஷாந்தும் மீனாட்சியும் ஒரே கல்லூரியில் ஒன்றாகச் சேர்ந்து படித்து, பின்னர் பாதியிலேயே படிப்பை நிறுத்தியவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், கொள்ளைச் சம்பவத்திற்கு மீனாட்சியின் இருசக்கர வாகனத்தை நிஷாந்த் பயன்படுத்தியதும் உறுதியானது.
