சென்னை: சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக தனது இன்ஸ்டகிராம் தோழிகளிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூரைச் சேர்ந்த 28 வயதான ஐஸ்வர்யா என்பவர், இன்ஸ்டகிராம் தளத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.
மலேசியாவைச் சேர்ந்த ரேகா, சென்னையைச் சேர்ந்த சுஷ்மிதா ஆகியோரும் இதே தளத்தின் மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி, தோழிகளாகினர்.
மூவரும் தனியார் நிறுவனங்களில் நல்ல பணியில் இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், தனது தந்தை திடீரென உடல்நலம் குன்றியதாகவும் அவருக்குச் சிகிச்சை அளிக்க பணம் தேவைப்படுவதாகவும் ஐஸ்வர்யா தன் தோழிகளிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, ரேகாவும் சுஷ்மிதாவும் தங்களால் இயன்ற அளவிலான தொகையைக் கொடுத்ததுடன், மற்ற நண்பர்களிடம் இருந்தும் பணம் வசூலித்துக் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், தாம் அமேசான் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றுவதாகக் கூறிய ஐஸ்வர்யா, சிங்கப்பூரில் உள்ள தமது நிறுவன அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் மாதம் 4,000 சிங்கப்பூர் டாலர் ஊதியமாகக் கிடைக்கும் எனக் கூறியதாகவும் தெரிகிறது.
இதை நம்பி தோழிகள் இருவரும் தாங்கள் பார்த்துவந்த வேலையைக் கைவிட்டதுடன், ஐஸ்வர்யாவிடம் மொத்தம் ரூ.24 லட்சம் பணமும் கொடுத்துள்ளனர்.
ஆனால், பணத்தைச் சுருட்டிக்கொண்டு ஐஸ்வர்யா தன் கைப்பேசியை அணைத்துவிட்டு தோழிகளுடனான தொடர்புகளைத் துண்டித்துவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
எனினும், ஏமாந்த தோழிகள் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில், ஐஸ்வர்யா கைதானார்.
பட்ட மேற்படிப்பை முடித்துள்ள அவர், சென்னையில் ஒரு விடுதியில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

