ஊழல் வழக்கை எதிர்த்து கே.என்.நேரு தாக்கல் செய்த மனு தள்ளுபடி

ஊழல் வழக்கை எதிர்த்து கே.என்.நேரு தாக்கல் செய்த மனு தள்ளுபடி

கோப்புப் படம்: தினமலர்

02 Nov 2026 - 7:15 pm

2 mins read

புதுடெல்லி: கடந்த திமுக ஆட்சியின்போது நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை அமைச்சராகப் பணியாற்றிய கே.என்.நேருவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள ரூ.634 கோடி லஞ்சப் புகார் தொடர்பில், உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தன் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கே.என். நேரு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை (நவம்பர் 2) தள்ளுபடி செய்தது.

பணி நியமனங்களில் முறைகேடு செய்து பல நூறு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கே.என்.நேரு மீது புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரது வீடுகள், தொடர்புடைய இடங்களில் அண்மையில் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது முக்கியமான ஆவணங்களும் மின்னணுச் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து, இந்தப் புகாரின் அடிப்படையில் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, கே.என். நேரு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

திங்கட்கிழமை இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்ற அமர்வு, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும், தன் மீதான லஞ்சப் புகார் விசாரணையை அவர் சட்டபூர்வமாகச் சந்தித்தே தீர வேண்டும் என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு, சட்டப்போராட்டத்தை எதிர்நோக்கியுள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்