கடலூர்: மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள் சுத்தமின்றி இருப்பதைக் கண்டு கோபம் அடைந்த கடலூர் மேயர் திருவாட்டி சுந்தரி ராஜா, தாமே வகுப்பறைகளை சுத்தம் செய்தார்.
செவ்வாய்க்கிழமை அன்று, மஞ்சக்குப்பம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார் மேயர் சுந்தரி ராஜா.
அப்போது, வகுப்பறைகள் சுத்தம் செய்யப்படாமல் குப்பையுடன் காட்சி அளித்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, தலைமை ஆசிரியரைக் கண்டித்த அவர், சுகாதாரத்துறை அதிகாரிகளை அழைத்து வகுப்பறைகளை சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டார்.
எனினும், மாநகராட்சி ஊழியர்கள் அங்கு வர தாமதமானதால், தாமே வகுப்பறைகளை சுத்தம் செய்வதாக கூறிய அவர், உடனடியாக ஒரு துடைப்பத்துடன் களமிறங்கினார்.
வகுப்பறையை அவர் முழுமையாக சுத்தப்படுத்திய பின்னர், வகுப்பறைகளை சுத்தமாக வைத்திருப்பது குறித்து அவர் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.

