சென்னை: திமுகவுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி குறைந்தது 12 தொகுதிகள் வேண்டும் என்று கேட்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், திமுக கூட்டணியில் மநீம கட்சிக்கு ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்து, வெற்றிபெற வைக்கவும், முதல்வர் ஸ்டாலின் தரப்பில், கமலிடம் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) சந்தித்துப் பேசியுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மநீம கட்சி அலுவலகத்தில், திமுக அமைச்சர்கள் சேகர்பாபு, சாமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் சண்முகம் ஆகியோர் மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசனை நேற்று சந்தித்துப் பேசினர்.
மக்களவைத் தேர்தலில் ஒரே ஒரு நாடாளுமன்ற மேலவை இடத்துடன் திருப்தி அடைந்ததாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளைப் பெற மநீம முனைப்பு காட்டி வருகிறது.
குறிப்பாக, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறும் நோக்கில் அதிக இடங்களில் போட்டியிட அக்கட்சி விரும்புகிறது. கட்சியின் நிர்வாகிகள் வட்டாரத் தகவலின்படி, மக்கள் நீதி மய்யம் சார்பில் 15 முக்கிய தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அந்தப் பட்டியல் திமுக தலைமையிடம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சென்னையில், வேளச்சேரி, மயிலாப்பூர், மதுரவாயல், அம்பத்தூர், தாம்பரம், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், தியாகராய நகர், கோவையில் கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் பகுதிகளும், திருச்சி கிழக்கு, திருவரங்கம், மதுரை மத்திய தொகுதியும் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த 15 தொகுதிகளில் இருந்து குறைந்தது 3 முதல் 4 தொகுதிகளையாவது திமுக ஒதுக்கும் என மநீம எதிர்பார்க்கிறது.
குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு தொகுதியை உறுதிசெய்ய அக்கட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாமல், தங்களது சொந்தச் சின்னமான ‘டார்ச் லைட்’ சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்பதில் மநீம உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்த உத்தேசப் பட்டியல் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்தே அமைச்சர் சேகர் பாபு, கமல்ஹாசனுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் சேகர் பாபுவுடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டாலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

