தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலும் பழமும் கைகளில் ஏந்தி...

4 mins read
cca4eab5-d516-4967-a012-f2fa3098b29b
‘பாலும் பழமும்’ படத்தில் சிவாஜி, சரோஜா தேவி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

நான் உயர்நிலை மூன்று தமிழ் வகுப்பை அன்றைய பீட்டி உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தேன். அரையாண்டு இறுதித் தேர்வு முடிந்ததும் எங்கள் தமிழ் ஆசிரியர் எல்லோரும் பாடங்களை எல்லாம் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு விரும்பியோர் தங்களுக்கு பிடித்த தமிழ்ப் பாடலை பாடலாம் என்று கூறினார். என்னைக் கூப்பிட்டு பாடச் சொன்னபோது நான் டி எம் செளந்தரராஜனின் ஏதோ ஒரு பாடலைப் பாடினேன். என்ன பாடல் என்பதுகூட இப்பொழுது நினைவுக்கு வரவில்லை.

ஆனால், எங்கள் வகுப்பில் படித்த ஒரு மாணவியைக் கூப்பிட்டுப் பாடச் சொன்னபோது அவர், என்ன வியப்பு, ஒரு பெண் பாடகர் பாடலைப் பாடுவார் என அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்க அந்த மாணவியோ டி எம் செளந்தரராஜன் பாடிய வேறொரு பாடலையே பாடினார். பெண் பாடகர் பாடும் பாடலைப் பாடாமல் ஏன் ஓர் ஆண்மகன் பாடிய பாடலைப் பாடுகிறாய் என ஆசிரியர் கேட்டபோது, அந்த மாணவி கூறிய காரணம் எங்கள் அனைவரையும் மலைக்க வைத்தது.

உயர்நிலை மூன்றாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த எங்கள் எல்லோருக்கும் வயது அப்போது 15 அல்லது மிஞ்சிப் போனால் 16 தொடக்கம் என்ற நிலைதான். அந்த மாணவி கூறிய காரணம், அந்தப் பெண்ணுக்கு எந்த அளவு முதிர்ச்சி இருந்தது, வாழ்க்கையில் ஒரு பெண் எப்படியெல்லாம் வாழ ஆசைப்படுவார், தனக்கு வாய்க்கும் கணவன் தன்னை எப்படியெல்லாம் பேணிக் காக்க வேண்டும் என்று எண்ணியிருப்பாள் என்று அப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது. நாங்கள் ஆண்கள் எல்லோரும் அந்தப் பருவத்தில் கேலிப் பேச்சும் கும்மாளமுமாய் இருந்த காலத்தில், அந்தப் பெண் இல்லற வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்று ஆழமாக சிந்தித்து தன் மனதுள் வளர்த்துக் கொண்டுள்ளார் என்பதை நினைக்க நினைக்க இன்றும் வியப்பாக உள்ளது.

அந்தப் படப் பாடல் நான் ஏற்கெனவே பார்த்ததாகக் கூறிய பாலும் பழமும் படத்தில் வரும் பாடல்தான்.

அதில் வரும் கதையின் நாயகன் புற்றுநோய் சிகிச்சைக்கு ஆராய்ச்சியில் ஈடுபடும் ஒரு மருத்துவர்.

தன்னிடம் தாதியாகப் பணிபுரியும் சரோஜாதேவியை மணப்பார். புற்றுநோய் மருந்து ஆராய்ச்சியில் இரவு பகல் பாராது தனக்கு உதவியாக இருக்கும் மனைவி சரோஜாதேவிக்கு காசநோய் வருகிறது.

அவர் படுத்த படுக்கையாக இருக்கும்போது, அவர்க்குத் தலைவாரி, பொட்டு இட்டு, அன்புடன் அரவணைத்து உணவு ஊட்டி கவனித்துக்கொள்ளும் கணவர் வேடத்தில் நடித்திருப்பார் சிவாஜி. அவர் பாடுவதுபோல் டி எம் செளந்தரராஜன் குரலில்,

“பாலும் பழமும் கைகளில் ஏந்தி

பவள வாயில் புன்னகை சிந்தி

கோல மயில்போல் நீ வருவாயே

கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே

உடல்நலமின்றி மனைவி சரோஜாதேவி படுத்த படுக்கையாக இருப்பதற்கு முன் தன்னை மனைவி கவனித்த விதத்தை கணவர் சிவாஜி பாடுவதாக,

உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே

உறங்க வைத்தே விழித்திருப்பாயே

கண்ணை இமைபோல் காத்திருப்பாயே

காதல் கொடியே கண் மலர்வாயே

பாலும் பழமும் கைகளில் ஏந்தி...

மனைவி தன்னை எப்படிக் கவனித்துக்கொள்வார் என்பதை கணவர் வாயிலாக கவியரசர் நான்கே வரிகளில் அனைவரையும் அசர வைத்துவிட்டார்.

அடுத்து நோயுற்ற மனைவி எப்படி ஓய்ந்துவிட்டார் என்பதை அழகு தமிழில் கூறுவதைப் பாருங்கள்,

பிஞ்சு முகத்தின் ஒளி இழந்தாயே

பேசிப் பழகும் மொழி மறந்தாயே,

அஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயே

அன்னக் கொடியே அமைதி கொள்வாயே

பாலும் பழமும் கைகளில் ஏந்தி.....

இனிவரும் வரிகளில் கவியரசர் மனைவி மீது அந்தக் கணவன் கொண்டிருக்கும் மாறாத காதலை நமக்கு உணர்த்துகிறார்,

ஈன்ற தாயை நான் கண்டதில்லை

எனது தெய்வம் வேறெங்கும் இல்லை

உயிரைக் கொடுத்தும் உனை நான் காப்பேன்

உதயநிலவே கண் துயில்வாயே

மனைவியான உதயநிலவை தன் உயிரைக் கொடுத்துக் காப்பேன் என்று கூறுகிறான் கதாநாயகன்.

இந்தப் பாடலின் சிறப்பை, கணவன், மனைவிக்குள் எத்தகைய பிணைப்பு இருக்க வேண்டும் என்பதை உயர்நிலை மூன்றாம் வகுப்பில் நான் உணரவில்லை.

எங்களுடன் தமிழ் வகுப்பில் பயின்ற சக மாணவி இதுபற்றி எந்த அளவு தெளிவுபெற்றிருக்கிறாள் என்பது அப்போதுதான் புரிந்தது.

பீம்சிங் அவர்கள் இயக்கிய இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் எந்த அளவிற்குப் புகழ்பெற்றன என்பதற்கு இதோ ஒரு சான்று.

இந்தப் படம் வந்த சமயம் நடிகர் திலகம் சிவாஜிக்கும் கவியரசருக்கும் ஒரு சிறு தகராறு காரணமாக அவர்களுக்குள் பேச்சுவார்த்தை இல்லையாம்.

ஆனால், இந்தப் படப் பாடல்கள் வந்தபின் சிவாஜி தனது காரை அனுப்பி கவிஞரை தனது வீட்டிற்கு அழைத்து, உன்னைப்போல் ஒரு கவிஞன் இல்லையடா எனக்கூறி அவரை ஆரத் தழுவினராம். கவிஞரின் வரிகளுக்கு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் டி எம் எஸ்ஸின் குரலில் பாடல் இழையோடும்.

இந்தப் பாடலுக்கு அன்றிருந்த வரவேற்பை வைத்துப் பார்க்கும்போது படத்தின் பெயரும் பெரும்பாலும் பாடல் வரிகளின் தொடக்கத்தைக் கொண்டே வைக்கப்பட்டிருக்க வேண்டும் என நம்பலாம்.

இந்தப் பாடலை முடிந்தால் நீங்களும் பாடல் காட்சியுடன் சேர்த்துப் பார்க்கவும். உங்களை அறியாமல் நீங்கள் மயக்கம் கொள்வீர்கள்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திகண்ணதாசன்பாடல்