சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டினால் கர்நாடகாவைவிட தமிழகம்தான் அதிக பயன்பெறும் என்று கர்நாடகத் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
எனினும், இருமாநிலங்களுக்கும் இடையே பிரச்சினை மேலும் பெரிதாகாமல் இருக்க மழைக்கடவுளான வருணர் உதவுவார் என்று தான் நம்புவதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
“மேகதாது அணையைக் கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. அந்த அணையைக் கட்டினால் கர்நாடகாவைவிட அதிகம் பயன்பெறப்போவது தமிழ்நாடுதான்.
“தற்போது போதிய அளவு மழை பெய்துள்ளதால் மேகதாது அணை குறித்துப் பேச வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு மாநிலங்களுக்கும் வருண பகவான் உதவுவார் என நம்புகிறேன்,” என்றார் டி.கே.சிவகுமார்.
முன்னதாக, சென்னை சேத்துப்பட்டு பகுதியில் அமைந்துள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தை அவர் பார்வையிட்டார். மேலும் பெங்களூரில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவது குறித்தும் அவர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார்.