சென்னை: தமிழகத்தின் கரூர் பகுதியில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவர்க்கு அரசு வேலை வழங்குவதற்கான அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் கரூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, 31 குடும்பத்தார்க்கு அரசுப்பணி வழங்கி தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது.
கருணை அடிப்படையில் வேலைக்கான நியமன ஆணை வழங்கப்பட்ட நிலையில், அரசின் இந்நடவடிக்கையை எதிர்த்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தீரன் திருமுருகன், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சீனி அகமது உள்ளிட்ட மூவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.
கரூர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்திவரும் நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவர்க்கு அரசு வேலை வழங்குவது விசாரணையைப் பாதிக்கச் செய்யும் என்றும் இது கரூர் சம்பவத்தின் சாட்சிகளைக் கலைக்கும் நடவடிக்கை என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டனர்.
தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பத்தினர்க்கு அரசு வேலை வழங்கப்படவில்லை என்றும் இதனால் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு மட்டும் அரசு வேலை வழங்குவது தவறான எடுத்துக்காட்டாக அமைந்துவிடும் என்றும் மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
ஏற்கெனவே இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசுப்பணி தற்காலிக அடிப்படையில் வழங்கப்பட்ட வேண்டும் என்றும் அந்தப் பணி வழங்கும் நடவடிக்கை வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு கட்டுப்படும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இந்த வழக்கு திங்கட்கிழமை (ஜூலை 27) விசாரணைக்கு வந்தபோது அரசுப் பணி வழங்கியது அரசின் கொள்கை முடிவு என்றும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் அரசுத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களைச் செவிமெடுத்த நீதிபதிகள், கருணைப்பணி வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள பல்வேறு வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு பின்பற்றவில்லை எனக் குறிப்பிட்டனர்.
“அரசு நினைத்தால் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்குத் திறன் பயிற்சி வழங்கி வாழ்வாதாரத்தை உயர்த்த முயலலாம்.
“பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்க்கு சாதாரண பணிதான் வழங்கியதாகக் கூறுவதை ஏற்க முடியாது. எனவே, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர்க்கு அரசுப் பணி வழங்கி பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது,” என நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

