சென்னை: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தவெக கட்சித் தலைவர் விஜய்க்கும், அக்கட்சி நிர்வாகிகளுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஏழு மனுக்களை ஒன்றன்பின் ஒன்றாக விசாரித்து வருகிறது உயர்நீதிமன்றம்.
அக்டோபர் 3ஆம் தேதி நடந்த விசாரணையின்போது இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி செந்தில்குமார், கரூர் சம்பவத்தில் பலியானவர்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
அச்சம்பவம் தொடர்பாக வெளியான காணொளிகளைப் பார்க்கும் போது மனவேதனை அதிகரிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“இச்சம்பவத்தில், இதுவரை இருவர்ர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அனைத்தையும் அனுமதித்து உள்ளீர்கள். இதற்கு யார் பொறுப்பு?
“சம்பவம் நடந்த இடத்திலிருந்து கட்சியின் தலைவர் சென்றுவிட்டார். பொது மக்களுக்கு உதவ யாரும் இல்லை. காவல்துறை கண்ணை மூடிக்கொண்டிருக்க முடியாது. முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என அனைவரும் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்,” என்றார் நீதிபதி செந்தில்குமார்.
நடிகர் விஜய்யின் பிரசார வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது தொடர்பான காணொளிகள் வெளியாகி உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? காவல்துறை தன் கைகளைக் கழுவிவிட்டதா? எனக் கேள்வி எழுப்பினார்.
“நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்களோ? பிரசார வாகனம் மோதியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாவிட்டால், மக்கள் எப்படி நம்புவர்?
தொடர்புடைய செய்திகள்
“வழக்குப்பதிவு செய்து பிரசார வாகனத்தைப் பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? இந்த விஷயத்தில், நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது,” என்று நீதிபதி செந்தில்குமார் கோபத்துடன் குறிப்பிட்டார்.
கரூரில் நடந்த சம்பவம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்றும் துரதிருஷ்டவசமான இந்த நிகழ்வை உலகமே கண்டுள்ளது என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.
“கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் பலியான நிலையில், கட்சித் தொண்டர்கள், ரசிகர்களைப் பொறுப்பற்ற முறையில் கைவிட்டுவிட்டு, சம்பவ இடத்தில் இருந்து ஓடிய தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுக்கு தலைமைப் பண்பு இல்லை; சம்பவத்துக்குப் பொறுப்பேற்கவும் இல்லை. அவர்களுக்கு நீதிமன்றம் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது,” என்றார் நீதிபதி செந்தில்குமார்.
மேலும், கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக காவல்துறையின் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமிக்க உத்தரவிட்டார்.