சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்துக்கு ஒரு தனிநபர் மட்டுமே காரணம் அல்ல என்று நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கார் பந்தயங்களில் தீவிர கவனம் செலுத்தி வரும் அவர், திரையுலகப் பணிகளுக்கு இரண்டாம் இடமே கொடுக்கிறார்.
இந்நிலையில், ஆங்கில இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில், அவர் பல்வேறு சுவாரசியமான தகவல்களையும் பல விவகாரங்கள் தொடர்பான கருத்துகளையும் பகிர்ந்துள்ளார்.
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு, பதிலளித்துள்ள அவர், நடந்த சம்பவத்துக்கு அனைவருமே பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
“தமிழகத்தில் பல விஷயங்கள் நடந்து வருகின்றன. இப்போது கூட்ட நெரிசல் சம்பவம் நடந்துள்ளது. அது தனி ஒரு நபரின் பொறுப்பல்ல. நாம் அனைவரும் அதற்கு பொறுப்பாவோம். ஊடகத்திற்கும் இதில் பங்கு உள்ளது. இன்று சிலர் கூட்டம் கூட்டுவதை விரும்புவதாக நினைக்கிறேன். இது முடிவுக்கு வரவேண்டும்.
“கிரிக்கெட் போட்டிகளுக்கும்கூட கூட்டம் கூடுகிறது. ஆனால், திரைப் பிரபலங்களுக்கு மட்டும் இவ்வாறு நடப்பது ஏன்? இது ஒட்டுமொத்த திரையுலகத்தையே உலகத்திற்கு மோசமான துறையாக காட்டிவிடும்,” என்று அஜித் கூறியுள்ளார்.
கரூர் சம்பவத்தை அடுத்து, கடும் விமர்சனங்களுக்கு ஆளானார் தவெக தலைவர் விஜய். பாதிக்கப்பட்ட குடும்பங்களை அவர் நேரில் சென்று பார்க்கவில்லை என்றும் குறைகூறல்கள் எழுந்தன.
இந்நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு தனி நபரைப் பொறுப்பாக்க முடியாது என்று அஜித் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
திரையுலகில் விஜய்க்கு நிகராகச் சாதித்துக்காட்டி அவருக்குப் போட்டியாக இருந்தவர் அஜித். அவர் கூறியுள்ள இக்கருத்து விஜய் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.
ஒரு காலத்தில் திரையுலகில் வேகமாக வளர்ந்துவந்த அஜித் குமார், ஜெயலலிதாவின் ஆதரவாளர் என்று ஒரு பேச்சு இருந்தது. ஜெயலலிதா காலமான பிறகு அஜித் அதிமுகவில் இணைந்து பெரிய தலைவராக உருவெடுப்பார் என்றெல்லாம்கூட பேசப்பட்டது. ஆனால், அவ்வாறு நடக்கவில்லை.
எனினும், இந்த ஆண்டு அஜித்தின் பிறந்தநாளின்போது தமிழக அரசியல் தலைவர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அரசியலுக்கு வரும் எண்ணம் தனக்கு அறவே இல்லை என்று அஜித் கூறினாலும், அவர் தெரிவிக்கும் எந்தவொரு கருத்தும் பேசுபொருளாக மாறிவிடுகிறது.
இந்நிலையில், அஜித் ரசிகர்களின் வாக்குகளைக் கவர வேண்டும் என தவெக நிர்வாகிகள் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர்.

