தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கரூர் துயரம்: மோடி, ராகுல் இரங்கல்; உறுதியளித்த அமித்ஷா

1 mins read
6088c672-1e0a-4b03-a31a-12ace6c22f12
கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக மோடி கூறியுள்ளார். - படம்: ஊடகம்

கரூர்: தவெக தலைவர் விஜய் பரப்புரையின்போது 36 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக மோடி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் கரூரில் நடந்த அரசியல் பேரணியின்போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவம் ஆழ்ந்த வருத்தம் அளிப்பதாக அவர் தமது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“எனது எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்கள் பக்கம் உள்ளன. இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்கு வலிமையுடன் இருக்க வேண்டுகிறேன்.

“காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்,” என்றும் தனது இரங்கல் செய்தியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் தமது இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.

“கரூர் சம்பவம் வருத்தம் அளிக்கிறது. காங்கிரஸ் தொண்டர்கள் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கரூர் நெரிசல் சம்பவம் குறித்துத் தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன், உடனடி நிவாரண நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார்.

உறுதியளித்த அமித்ஷா

இந்நிலையில், திரு ஸ்டாலினைத் தொடர்புகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கரூர் சம்பவம் குறித்து விவரங்களைக் கேட்டறிந்தார் என்றும் மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக உறுதியளித்தார் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்