தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கரூர் துயரம்: தலைவர்கள், திரைக்கலைஞர்கள் இரங்கல்

2 mins read
4cb7186c-47ea-4f45-98c1-996b3ca0e945
39 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பில் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். - படம்: ஊடகம்
multi-img1 of 2

கரூர்: விஜய் பரப்புரையின்போது 39 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்திய அதிபர் திரௌபதி முர்மு வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்த துயரச் செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,” என அவர் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் கரூரில் நடந்த அரசியல் பேரணியின்போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவம் ஆழ்ந்த வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி தமது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“எனது எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்கள் பக்கம் உள்ளன. இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்குப் பலம் கிடைக்க வேண்டுகிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்,” என்றும் தனது இரங்கல் செய்தியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் தமது இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.

“கரூர் சம்பவம் வருத்தம் அளிக்கிறது. காங்கிரஸ் தொண்டர்கள் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கரூர் நெரிசல் சம்பவம் குறித்து தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திரு ஸ்டாலினைத் தொடர்புகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கரூர் சம்பவம் குறித்து விவரங்களைக் கேட்டறிந்தார் என்றும் மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக உறுதியளித்தார் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

இதேபோல் பிரேமலதா விஜயகாந்த், சீமான், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட மேலும் பலர் இரங்கல் தெரிவித்தனர்.

திரையுலகத்தினர் இரங்கல்

கரூர் சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகர்கள் விஷால், சத்யராஜ், ஜிவி பிரகாஷ், சூரி, கார்த்தி, வடிவேலு, நடிகை ஓவியா, கவிஞர் வைரமுத்து, இயக்குநர்கள் பார்த்திபன், மாரி செல்வராஜ் ஆகியோர் நடந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

“மரணத்தின் படையெடுப்பால் கரூர் கருப்பூர் ஆகிவிட்டது,” என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

“சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து, சிறுசா இருக்கையில் திருத்திக்கோ தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ,” என்று நடிகர் சத்யராஜ் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அதுதான் தவெக கட்சியால் செய்யக்கூடிய குறைந்தபட்ச பரிகாரமாக இருக்கும் என்றும் விஷால் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்