சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் பலியான 41 பேரின் குடும்பங்களையும் தத்தெடுத்து, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவார் என்று தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தச் சோக நிகழ்வு, விஜய்யின் அரசியல் பயணத்தில் ஒரு கறுப்புப் பக்கமாகப் பார்க்கப்படுகிறது.
இவ்விபத்து தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, கரூர் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
விபத்துக்குப் பிறகு பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்க முயன்றபோது ‘கலவரம் ஏற்படும்’ என்று எச்சரித்து, கரூருக்குள் நுழைய காவல்துறை அனுமதிக்கவில்லை என்றும் இதனால் தவெகவினர் எல்லையில் காத்திருக்க வேண்டியதாயிற்று என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தவெக அமைப்பை முடக்குவதற்கு சதி நடக்கிறது என்று வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டினார்.
வளர்ந்து வரும் கட்சியாக இருக்கும் தவெகவின் மாவட்டச் செயலாளர்களைத் தொடர்ந்து கைது செய்து, அவர்களை அடக்க முயற்சி நடப்பதாகவும் அவர் கூறினார்.
“கரூர் நெரிசலுக்கு தவெக கழகமே காரணம் என்று எங்கள் கருத்தைக் கேட்காமல் ஒருதலைப்பட்சமாக செய்திகள் பரப்பப்பட்டு, நாங்கள் குற்றவாளிகளாக்கப்பட்டோம்,” என்று வேதனை தெரிவித்த ஆதவ் அர்ஜுனா, “கரூர் நெரிசலுக்கு யார் காரணம் என்ற உண்மை நிச்சயம் வெளியே வரும்,” என்று உறுதியளித்தார்.