சென்னை: காவிரி நீர்ப் பங்கீடு குறித்து உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லப்போவதாக தமிழ்நாடும் கர்நாடகாவும் அறிவித்துள்ளன.
காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதில் கர்நாடக அரசு முட்டுக்கட்டை போட்டுவந்த நிலையில், டெல்லியில் வியாழக்கிழமை (ஜூலை 30) கூடிய காவிரி நீர் மேலாண்மை ஆணையம், தமிழ்நாட்டுக்கு நாளொன்றுக்கு 3,500 கன அடி வீதம் 15 நாள்களுக்கு 4 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட உத்தரவிட்டது.
ஆனால், கர்நாடகா தண்ணீரைத் திறந்துவிடவில்லை. கர்நாடகாவில் போதிய மழையின்றி வறட்சி நிலவுவதால் தண்ணீரைத் திறந்து விட முடியாது எனக் கூறி, கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக வெள்ளிக்கிழமை (ஜூலை 31) அறிவித்துள்ளார்.
அதேவேளையில், கர்நாடகத்தின் நிலைப்பாட்டை நிராகரித்து, மாநில உரிமையைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தமிழக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இது தொடர்பாகச் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருவதாக அவர் கூறினார்.
கர்நாடகாவிற்கு வரவேண்டாம்: விஜய்க்கு சிவக்குமார் அறிவுறுத்து
தற்போதைய பதற்றமான சூழலில் விஜய் பெங்களூருக்கு வரவேண்டாம் என்று டி.கே.சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காவிரிப் பிரச்சினை குறித்துப் பேச ஆகஸ்ட் 3ஆம் தேதி விஜய் பெங்களூரு செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால், மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் அவரது வருகை சரியாக இருக்காது எனச் சிவக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
காவிரி நீர் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த விஜய் கர்நாடகா செல்வதற்குத் தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. பேச்சுவார்த்தையால் எந்தப் பயனும் இல்லை என்று அவை கூறின.
பாலைவனமான காவிரி, கொள்ளிடம்
இதனிடையே, காவிரி, கொள்ளிடம் ஆறுகள் வறண்டு பாலைவனம்போல் காட்சியளிப்பதால் திருச்சி உட்பட பல மாவட்டங்களில் கடுமையான குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. வழக்கமாக ஜூன் 12ல் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்படும்.
ஆனால், போதிய நீர் இல்லை எனக் கூறி கர்நாடகம் தண்ணீர் தர மறுப்பதால் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.
அத்துடன், மேகதாது அணைத் திட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஆதரவு தெரிவித்ததும் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒகேனக்கல் பகுதியிலும் நீர்வரத்து அடியோடு சரிந்து பாறைகளாகக் காட்சியளிப்பதால், குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் பரிசல் ஓட்டிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு - கர்நாடகா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், விஜய்யின் கடைசித் திரைப்படமான ஜனநாயகன் திரையிடல் கர்நாடகா முழுவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கன்னட அமைப்பினரும் விவசாயிகளும் கர்நாடகாவில் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

