புதுடெல்லி: கீழடி அகழாய்வு முறைகளில் குறைபாடுகள் இருப்பதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்திருப்பது புதிய விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் கீழடி அகழாயய்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், அந்த அகழ்வாராய்ச்சி அறிக்கை குறித்த பரிசீலனை நடைமுறைகள் மற்றும் அதன் பணிசார்ந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமானது என்றார்.
இந்த ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறியப்பட்ட குறிப்பிடத்தக்க முடிவுகள் தொடர்பாக குறை காண்பதற்கோ அல்லது அந்த அறிக்கையை வெளியிடுவதில் காலதாமதம் செய்வதற்கான நோக்கமோ மத்திய அரசுக்கு இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
முதல் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த அகழ்வாராய்ச்சி குறித்த அறிக்கைகள் நிபுணர்களின் பரிசீலனையில் உள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கீழடி அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட முறைகள், காலவரிசை, விளக்கம், முன்னிலைப்படுத்துதல் மற்றும் விரிவான பகுப்பாய்வுகள் போன்ற அம்சங்களில் குறைபாடுகள் காணப்படுவதாகவும் இது தொடர்பான விவரங்கள் அகழாய்வில் ஈடுபட்டுள்ள குழுவின் தலைமைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
“2014 முதல் 2017ஆம் ஆண்டுகளுக்கு இடையே கீழடி பகுதியில் தொல்லியல் சார்ந்த பொருள்கள் இருப்பதற்கான வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு இந்தியத் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டது. 2018ஆம் ஆண்டு முதல் தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியல் துறை தொடர்ந்து இந்தப் பகுதியில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வந்தது. எனினும், இந்த அகழாய்வுப் பணிகள் தொடர்பான இறுதி அறிக்கை மாநில அரசிடம் இருந்து இதுவரை வெளியிடப்படவில்லை,” என்றார் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்.
கீழடி ஆய்வறிக்கை தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே மோதல் நிலவி வருகிறது.
மத்திய தொல்லியல் துறையிடம் கீழடி ஆய்வறிக்கை அளிக்கப்பட்ட பின்னர் சில திருத்தங்களை முன்வைத்தது மத்திய அரசு.
முன்பு, இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் முன்பு பதிவிட்டிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதில், “கீழடி அகழாய்வில் இருந்து உலக அளவிலான ஆய்வகங்களுக்கு அனுப்பி, கரிமப் பகுப்பாய்வில் காலக்கணக்கீடு செய்யப்பட்ட மாதிரிகள், உரிய அறிக்கைகளை அளித்த பின்னரும் மேலும் சான்றுகள் தேவை என்பதை ஏற்க இயலாது,” என தமது பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.