முதல்வர் விஜய்யைக் காணக் கேரளத் தம்பதியர் நடைப்பயணம்

முதல்வர் விஜய்யைக் காணக் கேரளத் தம்பதியர் நடைப்பயணம்

படம்: இந்து தமிழ் திசை

11 May 2026 - 3:58 pm

1 mins read

சென்னை: முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, கேரளாவைச் சேர்ந்த தம்பதியர் 650 கிலோ மீட்டர் தூரம் நடைப்பயணம் மேற்கொண்டனர்.

கேரளாவைச் சேர்ந்த முகமது ரஃபி, அவரது மனைவி உம்முஷஹான மோல் தம்பதியர் கடந்த வியாழக்கிழமை (மே 7) தங்களது பயணத்தை மலப்புரம் பகுதியில் இருந்து தொடங்கினர்.

ஒவ்வொரு நாளும் தங்களின் பயண அனுபவங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ள இவர்கள் தவறவில்லை.

கொட்டும் மழை, கடும் வெயில் எனப் பல்வேறு வானிலை மாற்றங்களுக்கு இடையே நீடித்த இந்த நடைப்பயணத்திற்குத் தேவையான சிறிய பைகள், ஆங்காங்கே தங்கிச் செல்வதற்கான கூடாரங்கள் ஆகியவற்றுடன் புறப்பட்ட முகமது ரஃபியும் அவரது மனைவியும் பாலக்காடு வழியாகத் தமிழக எல்லைக்குள் வந்தனர்.

முன்பின் தெரியாத தங்களுக்குப் பொதுமக்கள் வழிநெடுகிலும் தெரிவித்த ஆதரவும் அளித்த உபசரிப்பும் நெகிழ வைத்ததாக அத்தம்பதியர் தெரிவித்தனர்.

விஜய்யின் மக்​கள் சேவையும் அவர் மீதான பாசமும்தான் தங்களை இந்தச் செயலில் ஈடுபட வைத்ததாக முகமது ரஃபி கூறியுள்ளார்.

முதல்வரைச் சந்திக்க முன்-அனுமதி பெறவில்லை என்றாலும் நிச்சயமாகத் தங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாகக் கூறியுள்ளார் உம்முஷஹான மோல்.

குறிப்புச் சொற்கள்