நெல்லை: கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் மருத்துவக்கழிவுகள் தமிழகத்துக்குள் கொண்டு வரப்பட்டு ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளில் கொட்டப்படுவது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவை அனைத்தும் அபாயகரமான மருத்துவக்கழிவுகள் என்பதால் நீர்நிலைகள் மாசுபடும் ஆபத்து உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்றுநோய் நிலையத்தில் இருந்து ஏராளமான மருத்துவக்கழிவுகள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள நடுகல்லூர், கோடகநல்லூர் பகுதிகளில் இருக்கும் நீர்நிலைகளில் கொட்டப்படுகின்றன.
இந்தக் கழிவுகள் கொட்டப்பட்ட இடங்களில் தமிழக அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கழிவுகள் அடங்கிய மூட்டைகளில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெறும் நோயாளிகளின் விவரங்கள், புற்றுநோய் நிலையத்தின் படிவங்கள் ஆகியவை காணப்பட்டன.
சமூக ஊடகங்கள் மூலம் இத்தகவல் பரவலாகப் பகிரப்பட்ட நிலையில், மூன்று பிரிவுகளின்கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த மருத்துவக்கழிவுகளை தகுந்த முறையில் அகற்றவும் ஆய்வுக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, குமரி மாவட்ட எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாகனச் சோதனையின்போது சிறிய வேன் ஒன்றில் உணவுக்கழிவுகள் இருப்பது தெரிய வந்தது. கேரளாவில் இருந்து அந்த வாகனத்தை காவல்துறை பறிமுதல் செய்து அதில் வந்த இருவரைக் கைது செய்தனர்.
மருத்துவக்கழிவுகள் தொடர்பாக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஜனவரி முதல் வாரத்தில் மக்களைத் திரட்டி உயிரியல் மருத்துவக்கழிவுகள், குப்பைகளை லாரிகளில் ஏற்றிச் சென்று, கேரளாவில் கொட்டும் போராட்டம் நடைபெறும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரனும் வலியுறுத்தி உள்ளார்.