தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மருத்துவக் கழிவுகளை கொண்டு செல்ல லாரிகளுடன் வந்த கேரள அதிகாரிகள்

2 mins read
4edc5e3b-4642-407c-8ee8-977c350c0bf2
லாரிகளில் ஏற்றப்படும் மருத்துவக் கழிவுகள். - படம்: ஊடகம்

திருநெல்வேலி: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவுக்கு பணிந்து திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளைக் கொண்டுசெல்ல கேரள அதிகாரிகள் லாரிகளுடன் வந்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கேரளத்தின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன என குற்றச்சாட்டுகள் எழுந்தன. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ், உள்ளிட்டோர் நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

தமிழக அரசு வழக்கறிஞர்கள், “கேரளத்திலிருந்து லாரிகளில் கொண்டு வந்து, தமிழகத்தில் கொட்டப்படும் உயிரி மருத்துவக் கழிவுகளை அகற்றும் செலவுகளை, கேரள அரசு வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட வேண்டும்,” என கேட்டுக்கொண்டனர்.

அதன்படி “திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்ல வேண்டும். கேரள அரசே பொறுப்பேற்று மூன்று நாள்களுக்குள் மருத்துவக் கழிவுகளை அகற்ற வேண்டும்,” என பசுமைத் தீர்ப்பாயம் கெடு விதித்தது.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவுப்படி மீண்டும் தங்கள் மாநிலத்துக்கே கொண்டு செல்வதற்காக, கேரள அதிகாரிகள் லாரிகளுடன் வந்தனர்.

முதல் கட்டமாக மருத்துவக் கழிவுகள் 11 லாரிகளில் ஏற்றப்பட்டு மீண்டும் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் திருநெல்வேலி மாவட்டம் கல்லூர், சுத்தமல்லி பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை லாரிகளில் ஏற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

நால்வர்மீது வழக்குப்பதிவு

இதனிடையே, மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது தொடர்பில் தமிழகக் காவல்துறை மேலும் இருவரைக் கைதுசெய்துள்ளது. அவர்களில் கேரளாவின் கண்ணூரைச் சேர்ந்த நிதின் ஜார்ஜும் ஒருவர். அவர் கழிவு மேலாண்மை நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. சரக்கு வாகன ஓட்டுநரான செல்லதுரை என்பவரும் கைதாகியுள்ளார்.

முன்னதாக, மருத்துவக் கழிவுகளைக் கொட்டப் பயன்படுத்த வாகனத்தைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அது சேலத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானது எனக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சுத்தமல்லியைச் சேர்ந்த மனோகர், 51, மாயாண்டி, 42, என்ற இருவரைக் காவல்துறை கைதுசெய்தது.

குறிப்புச் சொற்கள்